அரசாங்க உத்தியோகத்தர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நீண்டகால சம்பள மற்றும் ஓய்வூதிய முரண்பாடுகளுக்குத் தீர்வு காண்பதற்காக, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க 15 உறுப்பினர்களைக் கொண்ட ‘சம்பளங்கள் மற்றும் ஓய்வூதியங்கள் ஆணைக்குழுவை’ நியமித்துள்ளார். இதற்கான அதிவிசேட வர்த்தமானி நேற்று (22) வெளியிடப்பட்டது.
தெல்கே அசோக பீரிஸ் தலைமையிலான இந்த ஆணைக்குழு, உயர் நீதிமன்றத் தீர்ப்புகள் மற்றும் அமைச்சரவை தீர்மானங்களுக்கு இணங்க பொதுச் சேவையில் மறுசீரமைப்புகளைப் பரிந்துரைக்கவுள்ளது.
அத்துடன், நவீன தொழில்நுட்ப வளர்ச்சியை உள்வாங்கி, மக்களுக்குப் பொறுப்புக்கூறத்தக்க அரச சேவையை உருவாக்குவதற்கான உத்திகளை வகுக்கும். இக்குழு விசாரணைகளை முன்னெடுத்து, ஒரு வருடத்திற்குள் ஜனாதிபதியிடம் இறுதி அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் எனப் பணிக்கப்பட்டுள்ளது.








