2026 ஆம் ஆண்டின் தொடக்கம் முதல் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 11 இலட்சம் (1.1 மில்லியன்) எல்லையைத் தாண்டியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, ஜனவரி 1 முதல் ஜூன் 21 வரையிலான காலப்பகுதியில் மொத்தம் 1,104,354 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தரவுகள் குறிப்பிடுகின்றன.
இதேவேளை, ஜூன் 1 முதல் 21 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் மட்டும் 82,332 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் மாதத்தில் இதுவரை வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளில் அதிகளவானோர் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளதுடன், அவர்களின் எண்ணிக்கை 31,158 ஆகப் பதிவாகியுள்ளது.
அதனைத் தொடர்ந்து, ஐக்கிய இராச்சியத்திலிருந்து 6,658 பேரும், சீனாவிலிருந்து 5,178 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாண்டில் இதுவரை வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கையிலும் இந்தியா முதலிடத்தில் காணப்படுவதுடன், அந்நாட்டிலிருந்து 281,418 பேர் இலங்கைக்கு வந்துள்ளனர்.
மேலும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 104,751 பேரும், ரஷ்யாவிலிருந்து 76,963 பேரும் இலங்கைக்கு சுற்றுலா நோக்கில் வருகை தந்துள்ளதாக தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
அதேநேரம், 2026 ஆம் ஆண்டில் ஒரு மாதத்தில் பதிவான அதிகூடிய சுற்றுலாப் பயணிகள் வருகை பெப்ரவரி மாதத்தில் பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 279,328 ஆக இருந்ததாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.








