இனி வரும் காலங்களில் எந்த ஒரு தேர்தலிலும் நான் போட்டி யிட மாட்டேன் எனவும் புதிய அமைச்சரவையில் வீண் விரயங்களை குறைப்பதற்காக அவை மட்டுப்படுத்தப்பட்டு இருப்பது நாட்டிற்கு நல்லது இது ஒரு வரவேற்கத்தக்கது எனவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (19) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
கடந்த பாராளுமன்ற தேர்தலிலே ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்ட எனக்கும், என்னுடைய குழுவினருக்கும் ஆதரவு நல்கிய மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியத்தை நேசிக்கும் மக்கள் அனைவருக்கும் என்னுடைய இதயபூர்வமான நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன்.
இது நமது தோல்வி அல்ல நமக்கு ஏற்பட்ட ஒரு சிறிய சறுக்கலே ஆகும். இந்த சறுக்கலில் இருந்து பாடம் கற்று எழுந்து வருவதே எங்களுடைய நோக்கமாகும்.
கடந்த காலங்களில் ஆட்சி செய்த அரசாங்கங்கள் தமிழ் தேசியத்துடன் தமிழ் மக்களுடனும் தமிழ் தேசிய கட்சிகளுடனும் நேரடியான மோதலிலே ஈடுபட்டார்கள். அதே போன்று அவர்களது ஆட்சி வேறு விதமாக இருந்தது ஆனால் தற்போது ஆட்சிக்கு வந்திருக்கும் அரசாங்கம் மற்றும் அதனுடைய ஜனாதிபதி அந்த கட்சி தமிழ் தேசியத்தையும் தமிழ் மக்களது பிரச்சினைகளையும் கரையான் அரிப்பது போன்று உள்ளுக்குள் அறுத்துக் கொண்டு செல்கின்றது.
அந்த வகையில் எங்களுடைய மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டுமானால் நாங்கள் எதிர்காலத்தில் எங்களுக்குள்ளே இருக்கின்ற விருப்பு வெறுப்புகளை துறந்து அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இல்லாவிட்டால் எங்களின் எதிர்காலம் சூனியம் ஆகும் இதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.
எதிர்வரும் தேர்தல்களில் நான் போட்டியிடும் சந்தர்ப்பம் எக்காரணம் கொண்டும் இருக்காது. கடந்த தேர்தலில் கூட நான் அடுத்த தேர்தலில் போட்டியிட மாட்டேன் என தெரிவித்திருந்தேன். ஆனாலும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் ஏற்பட்ட பிளவு தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து தமிழரசு கட்சி வெளியேறியதன் காரணமாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி கட்சிகளின் அழுத்தமும் அந்த கட்சிகளின் மட்டக்களப்பு மாவட்டத்தில் தலைமை தாங்கி வழிநடத்தக் கூடிய ஒரு தேவையும் ஏற்பட்டதன் காரணத்தினால் தான் நான் இந்த தேர்தலில் போட்டியிட்டேன்.
இனிவரும் காலங்களில் எந்த ஒரு தேர்தலிலும் நான் போட்டியிட மாட்டேன். ஆனால் அரசியலில் இருந்து ஒதுங்கவும் மாட்டேன். அரசியலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கும் தமிழ் மக்களுக்கும் சேவையாற்றுவதற்கு எப்போதும் தயாராக இருப்பேன்.
அமைச்சர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டிருக்கின்றது. நான் நினைக்கின்றேன் வீண் விரயங்கள் இல்லாமல் போயிருக்கின்றது. அது நாட்டிற்கு நல்லது. அந்த வகையில் இரண்டு தமிழ் அமைச்சர்களும் மந்திரி சபையிலே உள்வாங்கப்பட்டிருக்கின்றார்கள். இது ஒரு வரவேற்கத்தக்க துறை சார்ந்த நிபுணர்களைக் கொண்ட ஒரு மந்திரி சபையாக நான் பார்க்கின்றேன்.
நான் நினைக்கின்றேன் ஜனாதிபதி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி நிச்சயமாக நினைவேந்தல்களுக்கு தடை விதிக்க கூடிய ஒரு நபராகவோ அல்லது கட்சியாகவோ இருக்காது. ஏனென்றால் அவர்களும் கடந்த காலங்களிலே 71 ஆம் ஆண்டும் 89 ஆம் ஆண்டு கால கட்டங்களில் பாரிய ஆயுத கிளர்ச்சியை நடாத்தி அரசாங்கத்தை கைப்பற்றுவதற்கு முயற்சி செய்து, நான் நினைக்கின்றேன் 60,000 க்கு மேற்பட்ட அவர்களுடைய போராளிகளையும் அவர்களுடைய தலைவர் ரோகன விஜயவீரர் அவர்களையும் இழந்தவர்கள். அவர்களை ஒவ்வொரு வருடமும் நினைவு கூர்ந்து கொண்டிருப்பவர்கள். அதே போன்று வடகிழக்கிலும் இறந்தவர்களை நினைவு கூறுவதற்கு தடையாக இருக்க மாட்டார்கள் என நான் நினைக்கின்றேன்.என்றார் .