தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் அமைச்சரவை முஸ்லிம் அமைச்சர் ஒருவர் இல்லாமை தொடர்பில் எழுந்துள்ள விமர்சனங்களுக்கு அமைச்சர் பிமல் ரத்நாயக்க விளக்கம் அளித்துள்ளார்.
எமது அரசாங்கம் இலங்கையர்களை உள்ளடக்கிய ஒரு அரசாங்கம் என்றும் சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் என்ற மத ரீதியான அடையாளங்களை கொண்டிருக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
76 ஆண்டுகளில் அனைத்து சமூகங்களும் தங்களது மத, கலாசார வேறுபாடுகளை மறந்து ஒரே நாடாக வாக்களித்து பெரும்பான்மை ஆட்சியைத் தேர்ந்தெடுப்பது இதுவே முதல் முறை என்று அவர் சுட்டிக்காட்டினார்.
தேசிய மக்கள் அரசாங்கம் எந்தவொரு சமூகத்தையும் அவர்களின் மத அல்லது கலாச்சார நடைமுறைகளின் அடிப்படையில் ஒருபோதும் பாகுபாடு காட்டாது. அரசாங்கத்தின் கொள்கையில் அது இல்லையென அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து இன மக்களாலும் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களே எமது கட்சியில் உள்ளனர்.
இங்கு பாரபட்சம் காட்டுவதற்கு எதுவும் இல்லை. மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தே அமைச்சு பதவிகள் வழங்கப்படுவதாக அமைச்சர் ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.