கடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழரசு கட்சி சார்பிலே போட்டியிட்ட சுமந்திரன் தோல்வியடைந்தது யாவரும் அறிந்ததே. இந்நிலையில் இன்றும் சுமந்திரன் தான் சரியான நபர் என்றும், அவர்தான் பாராளுமன்றத்தில் இடம்பெற வேண்டும் என்றும் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது சுமந்திரனின் நிலை குறித்தும், அவருடைய அரசியல் தேவை குறித்தும் அவருடைய ஆதரவாளர் ஒருவர் தொடர்ச்சியாக பதிவுகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் கடைசியாக அவர் பதிவிட்ட பதிவு,
திருமிகு எம்.ஏ.சுமந்திரன் அவர்களுக்கு,
ஜனாதிபதி சட்டத்தரணி,
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்,
கொழும்பு.
அன்புச் சகோதரருக்கு, உற்சாகமாய் இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
தேர்தலில் தோற்ற நிலையில், உற்சாகமாய் இருக்கிறீர்களா? எனக் கேட்டு, உங்களை நான் கிண்டல் செய்வதாகச் சிலர் நினைக்கலாம்.
உங்களை நன்கு அறிந்தவன் என்ற வகையில், இத் தோல்வியால், நீங்கள் உற்சாகப்பட்டிருப்பீர்கள் என்று நான் திடமாக நம்புகிறேன். ஒரு “முட்டாள்” இனத்தின் பிரதிநிதியாய் இருந்து, இவ்வளவு காலமும் “நிர்வாகப் பாரம்” சுமந்து நின்ற நீங்கள், இப்போது அப் பாரம் நீங்க, உற்சாகமடைவதில் என்ன வியப்பிருக்கப் போகிறது?
••••••
முதல் நாள் இரவில் ஆட்சிப் பொறுப்பைக் கொடுத்து, மறுநாளே, “காட்டுக்குப் போ!” என்று கைகேயி உத்தரவிட்டபோது, பாரமேற்றிய வண்டியிலிருந்து கழற்றி விடப்பட்ட எருதொன்று, தன் தோள்ப் பாரம் நீங்கிய மகிழ்ச்சியில் உடல் சிலிர்த்துச் சென்றாற் போல, இராமன் சென்றானாம் என்கிறார் கம்பர். உங்கள் நிலையும் அதுவாகத்தான் இருக்குமென உறுதியாய் நம்புகிறேன்.
••••••
“மாட்டேன்! மாட்டேன்!” என்று நீங்கள் மறுத்து நிற்கவும், ஆற்றலும், அறிவும் மிகுந்த ஒருவர் கட்சிக்குத் தேவை என்பதை உணர்ந்து, சம்பந்தன் ஐயா கூட்டமைப்புக்குள் உங்களை வலியக் கொண்டு வந்தார்.
அன்று தொட்டு, சம்பந்தன் ஐயா பெயருக்குத் தலைவராக இருக்க, கட்சியை நீங்கள் தான் வழிநடத்தி வந்தீர்கள்.
••••••
புலிகளின் கட்டாயத்தின் பேரில் தான் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இது பரகசியமான இரகசியம்!
அவர்களது முன்மொழிதலை வழிமொழியாது இருக்கும் துணிவு அப்போது எவருக்கும் இருக்கவில்லை.
அதனால் தமிழரசுக் கட்சியோடு மற்றைய கட்சிகளும் ஒன்றாக்கப்பட்டன.
பொருந்தாக் கல்யாணம் எனத் தெரிந்திருந்தும் வேறு வழியின்றித் தமிழரசுக்கட்சி மணவறையில் உட்காரவேண்டிவந்தது.
••••••
உங்கள் கட்சியின் வீட்டுச் சின்னம் கூட்டமைப்பின் தேர்தற் சின்னமாக ஏற்றுக் கொள்ளப்பட்டதிலிருந்து
இணைப்பாளர்கள் தமிழரசுக்கட்சிக்குத் தந்த முதன்மையை நம்மினம் அறிந்து கொண்டது.
ஆனால், ஒன்றிணைந்தவர்கள் அதனைத் தெரிந்து கொள்ளாதவர்கள் போல, தமக்கான சமவுரிமை வேண்டத் தலைப்பட்டனர்.
••••••
“நீ பொரி கொண்டு வா, நான் உமி கொண்டு வருகிறேன். இருவரும் ஊதி ஊதித் தின்னலாம்” என்றால்,
உமி வைத்திருப்பவனுக்கு உவப்பு உண்டாதல் இயல்பு தானே! வன்முறையிலிருந்து மென்முறைக்குத் தள்ளப்பட்டவர்களும், சுயநலத்தோடு மென்முறை வழி நின்றவர்களும், கூட்டமைப்பில், இந்த உவப்போடுதான் தமிழரசுக்கட்சியுடன் ஒட்டிக் கொண்டனர்.
••••••
புலிகளின் மறைவு வரையும், அடங்கிக் கிடந்த அக்கூட்டுக் கட்சியினர், இடைக்காலத்தில் வாய்த்த பாராளுமன்றப் பதவிச் சுகத்தை இழக்க விரும்பாது, புலிகளின் மறைவின் பின்னர், தமிழரசுக் கட்சியின் தோளில் ஏறி உட்கார்ந்து, தம்மைப் பலப்படுத்த நினைந்தனர்.
••••••
அந் நிலையில் தான், அவர்களைக் கையாளவும், போரால் பாதிக்கப்பட்ட இனத்தைக் காவல் செய்யவுமாக
தனக்கு ஓர் தக்க துணை தேவை என நினைந்த சம்பந்தனார், உங்களைத் தமிழரசுக்கட்சிக்குள் கைபிடித்து இழுத்து வந்தார்.
••••••
தான் செய்ய நினைந்த பல விடயங்களை உங்களைக் கொண்டு செய்வித்துப் பயன்பெற்றுக் கொண்ட அவர்,
பிரச்சினைகள் வந்த போதெல்லாம், போலிச் சாமியார் போலக் கண் மூடியிருக்க, அப் பிரச்சினைகளுக்குத் துணிவாய் முகங்கொடுத்து. அதனால் வந்த பாதிப்புகளின் பலிக்கடாவாக உங்களை நீங்களே ஆக்கிக் கொண்டீர்கள்.
••••••
இவ் உண்மையை அனைவரும் அறிந்திருந்தார்கள். ஆனாலும் அனுபவமும், மூப்பும், தலைமைப் பதவியும் சம்பந்தனாரைக் காவல் செய்ய, அவர்மேல் காட்ட முடியாத தமது கோபத்தை,
கூட்டணிக் கட்சியினர் உங்கள் மேல் காட்டத் தொடங்கினார்கள்.
••••••
பின்னாளில், வடக்கு மாகாணசபை முதலமைச்சர் பதவிக்காக, முன்னாள் நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் அவர்களையும், சம்பந்தனார், உங்களைப் போலவே வலிய அழைத்து வந்தபோது தான்,
உங்கள் கட்சிக்குச் “சனி” பிடிக்கத் தொடங்கியது. ஒரு நீதவான் எந்த நீதிக்கும் கட்டுப்படாமல், தன் சுயநல வளர்ச்சிக்காக, கட்சிக்குள் “சூது” விளையாடத் தொடங்கினார்.
••••••
உங்களின் காவலால், கூட்டமைப்புக்குள் தமது அதிகாரத்தைச் செலுத்தமுடியால் தத்தளித்து நின்ற
ஆயுதக் கட்சிகளுக்கு, அவரது சூழ்ச்சிகள் மிகவும் பிடித்துப் போக, தாம் செய்ய வேண்டிய வேலைகளை, அவர் செய்கிறாரே என மகிழ்ந்து, அவரைத் தங்களின் தலைவராய் உலகிற்குக் காட்டி, தமிழரசுக் கட்சியின் பலத்தைச் சிதைக்க நினைந்த அவர்கள், இரகசியமான முறையில், தனிமையான அறையில், இரவோடு இரவாக “தமிழ் மக்கள் பேரவை”யை உருவாக்கினார்கள். “அலிபாவும் நாற்பது திருடர்களும்” கதையை இங்கு நாம் மீளப் படித்தோம்.
••••••
அந் நேரத்தில் எல்லாம் துணிந்து நின்று, தமிழரசுக்கட்சியைத் தாங்கள்தான் காவல் செய்தீர்கள்.
நாளடைவில் பொறுப்பற்ற பொய்யரான முதலமைச்சரை நம்பி, மாற்றணியினர் வெளியேற முற்பட்ட போது,
அவர்களைத் துணிவோடு வழியனுப்பி வைத்தவர் தாங்கள் தான். அப்போதெல்லாம் தமிழரசுக்கட்சியில் இன்று உரிமை பாராட்டும் பலரும் வாய்மூடி நின்றமையை நம் இனம் அறியும்.
••••••
தாம் அமைத்த கூட்டணியால் பலம் பெருகும் என நினைந்து, கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்ற மாற்றணியினர், தமது கூட்டு, மக்கள் மத்தியில் உறுதியாகும் என, கனவு கண்டிருந்த நிலையில்,
நடந்து முடிந்த தேர்தல் அவர்களின் கனவைப் பகற்கனவாக்கியிருக்கிறது.
••••••
“தாங்கள் தான் தமிழரசுக்கட்சியின் பலம்” என்றாற் போல வித்தை காட்டிக் கொண்டிருந்த கூட்டமைப்பின் மாற்றணியினரினுள், அடைக்கலநாதனையும், கஜேந்திரகுமாரையும் தவிர மற்றையோர்
தேர்தலின் முடிவு கண்டு மண்கவ்வி, மனம் உடைந்து நிற்கின்றார்கள். இப்போது யார் பலத்தில், யார் வாழ்ந்தார்கள் என்ற உண்மை, அனைவருக்கும் தெரிந்து விட்டது.
••••••
இந்த உண்மையை, உலகறியத் தெரியச் செய்ததுதான் உங்களின் குற்றமாம். 2015 தேர்தலில் கூட்டமைப்புக்கு மக்கள் வழங்கிய பதினாறு சீற்றுகள், மேற் சொன்னவர்களும், உள்ளிருந்த சில புல்லுருவிகளும் விளைவித்த உட்பகையால், 2020 இல் ஆறாக மாற, இம்முறை ஒட்டாத அவர்களில் பலரை வெட்டிவிட்டு,தனித்து நின்று தமிழரசுக்கட்சி எட்டு இடங்களைக் கைப்பற்றி, தனது பலத்தை நிரூபித்திருக்கிறது.
••••••
கட்சியின் பலத்தை வெளிக்காட்டச் செய்த நீங்கள் குற்றவாளியாம்!. சிலர் சொல்லுகிறார்கள்.
தான் சார்ந்த கட்சியின் பெருமையை உலகிற்கு உணர்த்திய உங்களின் செயல், எப்படிக் குற்றமாகும் என்று தெரியவில்லை.
••••••
தேர்தலின் பின்னான ஊடகச் சந்திப்பின் போது, உங்களது தோல்வி பற்றிய கவலை சிறிதுமின்றி,
கட்சியின் வெற்றி பற்றி நீங்கள் உரைத்த போது, உங்கள் மீதான மதிப்பு அதிகமானது.
••••••
கூட்டணிக் கட்சிகளோடு ஒற்றுமை பேணவில்லை என்பதுதான் உங்களின்மேல் முதன்முதலில் எழுந்த குற்றச்சாட்டு.
பலவீனமாக இருந்து கொண்டு பலங் காட்டப் புறப்பட்ட கூட்டணிக் கட்சிகள் மீது,
அப்போது யாரும் குற்றம் சொன்னதாய்த் தெரியவில்லை. அப்படியே விட்டிருந்தால் பலத்தை பலவீனம் விழுங்கியிருக்கும். தடுத்தவர் நீங்கள்! பொய்மைக்குத்தான் எங்களிற் பலர் ஆதரவளிக்க முன்வருகிறார்கள்.
இம்முறை தேர்தலில் நீங்கள் செய்தது சரி என்று நிரூபித்து, இன்று ஆளுமையாய் தலைநிமிர்ந்து நிற்கிறீர்கள்.
••••••
தமிழரசுக் கட்சியின் “கோடரிக் காம்பொன்றை”த் தலைமையாக்கி, அவரின் கீழ் மற்றைய அணியினர் ஒன்று சேர்ந்து, பூட்டிய அறையில் இரகசியமாகக் கூட்டம் போட்ட பொழுது, இது தவறென்று சொல்லத் துணிவில்லாதவர்கள் தான், “சுமந்திரன் தான் ஒற்றுமையைச் சிதைத்தார்” என்று,
இன்று குற்றஞ்சாட்டி நிற்கிறார்கள். யாழ் தமிழர்களின் தராசு, சமநிலை சிதைந்து நிற்கிறது.
••••••
இன்று யாழ் தமிழ் மக்கள், உங்களைத் தோற்கடித்திருக்கிறார்கள். “தமிழ்மக்களின் ஒற்றுமையைக் குலைத்தவர்” என்றும், “இனத்துரோகி” என்றும், “புலிகளின் பகைவன்” என்றும், “அரசாங்கத்தின் வால்பிடி” என்றும் பலவிதமான குற்றச்சாட்டுகள் உங்களின் மேல் அடுக்கப்பட்டன. “டயஸ்போராக்கள்”, “இராஜதந்திரம் அறியாதவர்கள்”, “தீர்க்கதரிசனம் அற்றவர்கள்” என, பலராலும் இக் குற்றச்சாட்டுகள் திட்டமிட்டு உங்கள் மேல் திணிக்கப்பட்டன. மேற்சொன்னவர்களின் கைப்பொம்மைகளாகி இந் நாட்டின் இளையோர் பலர் கூட,
ஆராய்வின்றித் தாங்களும் அதனை வழிமொழியத் தலைப்பட்டார்கள்.
••••••
அவர்களைக் கொண்டு “சுத்துமாத்துச் சுமந்திரன்” என உங்களுக்குப் பட்டம்சூட்டுவித்து, உங்கள் மீதான வெறுப்பை அப்பாவி மனிதர்களின் உள்ளத்தில், திட்டமிட்டு ஆழப் பதித்தார்கள் அக் கயவர்கள்.
••••••
உங்களை நம் இனத்திலிருந்து ஒதுக்கிவிட வேண்டும் என விரும்பியவர்களில் முக்கியமானவர்கள் அந்த “டயஸ்போராக்கள்” தான். போர் பாதிப்பைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, வெளிநாடுகளில் சென்று ஒளிந்து பணந்தேடிய அவர்கள், இன்று தமிழர்களின் பாராளுமன்றப் பதவிகளையும்,
அப் பணத்தைக் கொண்டு தமதாக்கிக் கொள்ள விரும்புகின்றார்கள் “ஈனப்பிறவிகள்”.
••••••
தமது பொருட்பலத்தால், கட்சிக்குள் சிலரை விலைக்கு வாங்கியும், ஊடகங்கள் பலவற்றைத் தமதாக்கிக் கொண்டும், உங்களுக்கெதிராகச் செய்த பிரச்சாரங்கள் மிகப் பெரியன. தனித்து நின்ற “அபிமன்யுவை”, ‘சக்கரவியூகம்’ அமைத்து அழித்த துரியோதனர்கள் போலத்தான், அவர்களின் செயல் அமைந்து போயிற்று.
••••••
ஆனாலும் நீங்கள் தோற்கவில்லை என்றுதான் நான் சொல்வேன். இத்தனைபேர் சேர்ந்து தனி ஒருவரான உங்களைத் தாக்கியும், பதினைந்தாயிரத்திற்கு மேற்பட்டவர்கள் உங்கள் மீதான நம்பிக்கையை,
தேர்தலில் பதிவு செய்திருக்கிறார்கள். இனத்தை அடகு வைத்து, உங்களை விட அதிக வாக்குப் பெற்று,
வெற்றி பெற்றவர்களோடு ஒப்பிடுகையில், இத்தனை பேரின் எதிர்ப்பையும் தாண்டி நீங்கள் பெற்ற வெற்றி,
என்னைப் பிரமிக்க வைக்கின்றது.
••••••
வெளிநாடுகளுக்குச் சென்றும், உள்நாட்டில் நின்றும், புலிப்போர்வை போர்த்தி, “தமிழ்த் தேசியம்” என்கின்ற “பொய்மானிற்குப்” பின்னால், மக்களை மயக்கி ஓடச் செய்த பின், வெற்றி எனும் “சீதையை”, ஏமாற்றிக் கைப்பற்றியிருப்பவர்களோடு ஒப்பிடுகையில், நீங்கள் பெற்றதே, உண்மை வெற்றி என நினைக்கத் தோன்றுகிறது.
••••••
பெரும்பான்மை பெற்று வென்றிருக்கும் ஜே.வி.பி. அணி, விரைவில் அரசியல் சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப் போகிறதாம். அவர்கள் கொண்டுவரப் போகும் மாற்றங்கள், தமிழருக்குச் சார்பானவையா? இல்லையா? என அறிவதற்கும், மாறான சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுமானால், அதனை நீதிமன்றில் எதிர் கொண்டு வெல்வதற்கும் தமிழரசுக் கட்சியில் தற்போது பலபேர் இருக்கிறார்கள் போல. அதனால் தான், நம் இனம் உங்களை நிராகரித்திருக்கிறதோ? சிரிப்புத் தான் வருகிறது!
••••••
கட்சியில் யாரும் இல்லாவிட்டால் என்ன? தமது “ஆபத்பாந்தவர்” எனக் கருதி, இருபத்தி எண்ணாயிரம் வரையிலான வாக்குகளை அள்ளிக் கொடுத்து, தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் டாக்டர் அருச்சுனாவும், அவரின் சட்டந்தெரிந்த “தங்கமும்” இருக்கவே இருக்கிறார்கள். அவர்கள், அப் பிரச்சினையைக் கையாண்டு விட்டுப் போகட்டும். அதுபற்றி நீங்கள் அதிகம் கவலைப்பட வேண்டாம்!
தயைகூர்ந்து, நீங்கள் சற்று அமைதியாக ஓய்வெடுங்கள். வெகுவிரைவில் அத்தனை பேரும் உங்கள் காலில் வந்து விழப்போகிறார்கள். அப்போது நீங்கள் இயங்கினால் போதும். காலம் உங்களைப் பல்லக்கில் ஏற்றிச் சுமந்து, கம்பீரமாய் மீண்டும் அழைத்து வரப்போகும் நாட்கள் வெகுதூரத்தில் இல்லை.
••••••
சகோதரா! உங்களுக்குப் பழைய வரலாறொன்றினை நினைவூட்ட விரும்புகிறேன். இந்தியப் பிரதமராய்ப் பதவியேற்று, சாதனைகள் பல புரிந்த இந்திராகாந்தி அம்மையார், அவசரகாலச் சட்டத்தால் பின்னாளில் பதவி இறக்கப்பட்டார். 1977ஆம் ஆண்டு நடந்த தேர்தலில், தன் சொந்தத் தொகுதியிலேயே அவர் தோற்கடிக்கப்பட்டார். பல மூத்த தலைவர்கள் ஒன்றிணைந்து, அவரை எதிர்த்து, “ஜனதாக் கட்சியின்” அரசை நிறுவினர். அவர்கள், இந்திராகாந்தியைப் பாராளுமன்ற வளாகத்தினுள் சிறைவைக்கவும் தவறவில்லை.
நிகழ்ந்த தோல்வியால், அம்மையாரைக் காங்கிரஸ் கட்சியே புறந்தள்ள முனைந்தது. அதனால், காங்கிரஸ் கட்சி பிளவுபட்டு, “இந்திரா காங்கிரஸ் கட்சி” ஆரம்பிக்கப்பட்டது. எதற்கும் அசராமல் தனியொருவராய் நின்று, அனைவரையும் எதிர் கொண்டார் அவ்வம்மையார்.
••••••
மூன்று ஆண்டுகளுக்குமேல், “ஜனதாக் கட்சியால்”, நின்றுபிடிக்க முடியாமற் போயிற்று.1980 இல் நடந்த தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று, அம்மையார் மீண்டும் ஆட்சியைத் தனதாக்கினார்.
இடையில் ஏற்பட்ட தோல்வியால், அவரின் புகழ் பன்மடங்கு உயர்ந்தது.
••••••
அக் காலத்தில், நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். அவ்வம்மையார் மீது எனக்கு மிகப் பெரிய ஈடுபாடு இருந்தது. அப்போது தமிழ் நாட்டில் வெளிவந்து கொண்டிருந்த, ‘குமுதம்’ சஞ்சிகையின் ஆசிரியராக,
எஸ்.ஏ.பி.அண்ணாமலை அவர்கள் பணியாற்றினார். எதிர்காலத்தைக் கணிக்கும் ஆற்றல் மிக்க எழுத்தாளர் அவர். 1977 இல் அம்மையார் தோல்வியுற்ற போது, அத் தோல்வியைப் பலரும் கொண்டாடி மகிழ்ந்த வேளையில், அவர், ஒர் ஆசிரியத் தலையங்கம் எழுதினார்.
••••••
அத் தலையங்கத்தில், “மகளே! இம் மண்ணுக்காய் உழைத்த நீ சற்று ஓய்வெடு! பின்னர், முன்னரைவிட வேகத்தோடு இந் நாட்டைக்காக்க, மீண்டும் புறப்பட்டு வா!” என்பதுபோல எழுதியிருந்தார்.
இப்போதும் அது என் ஞாபகத்தில் இருக்கிறது. நண்பரே! உங்களுக்கும் அதே வார்த்தைகளைப் பரிசளிக்க விரும்புகிறேன். “ஓய்வெடுங்கள்! பின்னர், உற்சாகத்தோடு நம்மினம் காக்கப் புறப்பட்டு வாருங்கள்!
உங்களை நமது இனம் வரவேற்கப் போகும் காலம் அதிக தூரத்தில் இல்லை. அப்போது உங்களது செயலும், எனது எழுத்தும் அனைவராலும் ஒருமித்து அங்கீகரிக்கப்படும். காத்திருக்கின்றேன்”.