அநுராதபுரம் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவர் கடந்த புதன்கிழமை (21) கொழும்பு ஜம்பட்டா தெருவில் அமைந்துள்ள விகாரை ஒன்றின் மலசலகூடத்தில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவந்ததாவது,
அனுராதபுரம், ரம்பேவ பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய பல்கலைக்கழக மாணவன் ஒருவனே உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் உயிரிழந்த பல்கலை மாணவன் கொழும்பு மருதானை பிரதேசத்தில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் மின்சார தொழில்நுட்பம் தொடர்பான நடைமுறை பயிற்சியில் ஈடுபடுவதற்காக கொழும்பு பிரதேசத்திற்கு சென்றுள்ள நிலையில் ஜம்பட்டா வீதியில் அமைந்துள்ள விகாரையொன்றின் விடுதியில் தங்கியிருந்துள்ளார்.
சம்பவத்தன்று பல்கலைக்கழக மாணவன் இரவு உணவு எடுத்து வருவதாக கூறி விகாரையின் விடுதியிலிருந்து வெளியே சென்றுள்ள நிலையில் வெகு நேரமாகியும் குறித்த மாணவன் திரும்பி வராததால் விடுதியில் தங்கியிருந்தவர்கள் மலசலகூட கதவினை தட்டியுள்ளனர்.
பல்கலை மாணவனிடமிருந்து எந்த பதிலும் கிடைக்காததால் விடுதியில் தங்கியிருந்தவர்கள் மலசலகூட கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது பல்கலை மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த பல்கலை மாணவன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.