கடந்த பொது தேர்தலில் போட்டியிட்ட அனைத்து தமிழ் கட்சிகளும் ஒட்டுமொத்தமாக மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளார்கள் அல்லது பாரிய எதிர்ப்புக்குள்ளாகி உள்ளார்கள் என்பது பொது தேர்தல் முடிவுகளில் இருந்து தெரிய வருகின்ற ஒரு தெளிவான விடயமாக இருக்கின்றது.
குறிப்பாக தமிழரசு கட்சி மற்றும் அதற்கு போட்டியாக களமிறங்கிய சங்கு சின்னத்தில் போட்டியிட்ட ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி மற்றும் தாங்கள் தான் தமிழர்களுடைய தலைவர்கள் என்று சொல்லிக் கொண்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினுடைய தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய இப்படியான முக்கிய கட்சிகள் எல்லாம் தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளன.
ஒரே ஒரு ஆறுதலான விடயம் மட்டக்களப்பில் தமிழரசு கட்சியானது மூன்று ஆசனங்களை இவ்வளவு எதிர்ப்புகளுக்கு மத்தியிழும் பெற்றிருப்பது என்பது வரவேற்கக்கூடிய ஒரு விடயமாக இருக்கிறது.
அதேசமயம் திருகோணமலையில் ஒரு ஆசனத்தையும், அம்பாறை மாவட்டத்தில் ஒரு ஆசனத்தையும் தமிழரசு கட்சி கைப்பற்றி இருக்கிறது என்றால், தமிழரசு கட்சியானது அந்தவிடயம் ஏன் அவ்வாறு நடந்தது, ஏன் வடக்கு மாகாணத்தில் அவ்வாறு நடக்கவில்லை என்பதை ஒப்பிட்டு பார்க்க வேண்டிய தருணமாக இது இருக்கின்றது.
தமிழ் தேசியம் என்பது விளங்கிக் கொள்ளப்பட்ட விதமும், தமிழ் தேசியதை ஒவ்வொரு கட்சிகளும் தங்களுடைய சுய நலன்களுக்காக பாவிக்கப்பட்ட விதமுமே இந்த வீழ்ச்சிக்கு காரணமாக காணப்படுகிறது.
குறிப்பாக தமிழரசு கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்கள் எல்லாரும் சேர்ந்துதான் இந்த நிலைமைக்கு உள்ளாக்கி இருக்கின்றார்கள். இத்தனைக்கும் தமிழரசு கட்சிதான் இதற்கு முழுபொறுப்பையும் ஏற்க வேண்டிய தேவையும் இருக்கின்றது.
தமிழரசுக் கட்சியினுடைய அகங்காரத்தன்மை, தமிழரசுக் கட்சி மற்றவர்களை இணைத்துக் கொள்ளாமல் இருப்பதற்கு இருக்கின்ற நிலைமை, தமிழரசு கட்சிக்குள் சுமந்திரனுடைய ஆதிக்கம் என்பனதான்
தமிழரசு கட்சியையும் தமிழ் மக்களையும் இந்த நிலைமைக்கு இட்டுச்சென்றுருக்கிறது.
எனவே இனிவரும் காலங்களில் தமிழரசு கட்சி அல்லது ஏனைய தமிழ் தரப்புக்கள் தங்களை சுய விமர்சனம் செய்துகொள்ள வேண்டிய ஒரு தேவை ஏற்பட்டிருக்கின்றது. இதே போன்று இவர்கள் பிரிந்து நின்றுதான் எதிர்காலத்திலும் தமிழ் தேசியம் தொடர்பாகவும், தமிழ் மக்கள் பிரச்சினை தொடர்பாகவும் கதைக்க போகின்றார்கள் என்றால், இன்று அநுர குமார திஸாநாயகவுக்கும் அவரது கட்சிக்கும் கிடைத்த வெற்றி இன்னும் பலமடைவதற்கும் முற்றுமுழுதாக தமிழ் மக்கள், தமிழ் கட்சிகளை நிராகரிப்பதற்குமான ஒரு சூழலை ஏற்படுத்தும்.
எனவே நடந்த சம்பவங்களை படிப்பினையாக வைத்துக்கொண்டு உடனடியா தமிழ் தரப்புகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து எவ்வாறு அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வது? எவ்வாறு அடுத்த கட்டத்திற்கு தங்களை தயார்படுத்துவது என்பது தொடர்பாகவும், ஜனாதிபதி தேர்தலின் போதும், பொது தேர்தலின் போதும் தங்கள் நடந்து கொண்ட விதம், தங்கள் விட்ட தவறுகள், தங்களுடைய எதேச்சாதிகாரமான போக்கு என்பவற்றை சுய விமர்சனத்திற்கு உட்படுத்துவதோடு அது தொடர்பில் தமிழ் மக்களிடம் அனைத்து தமிழ் கட்சிகளும் மன்னிப்பு கோர வேண்டும் என்றே நாங்கள் எதிர் பார்க்கின்றோம்.
ஏன் என்றால் தமிழ் தேசியத்தை காட்டி இதுவரை காலமும் தமிழ் மக்கள் ஏமாற்றுபட்டு வந்திருக்கிறார்கள் என்பது இந்த தேர்தலின் ஊடாக புலனாகி இருக்கின்றது. எனவே உணர்ச்சி வசப்படுத்துகின்ற அல்லது உசுப்பேத்துகின்ற விடயங்களை விட தமிழ் தேசிய அரசியலை நிதானமாக கொண்டு செல்ல வேண்டிய ஒரு கால கட்டம் வந்திருக்கின்றது.
தமிழ் தேசியத்தை வைத்து இனிமேலும் பிழைக்க முடியாது என்பதை அனைத்து தமிழ் தரப்பு கட்சிகளும் உணர்ந்து கொள்ள வேண்டும். எனவே எவ்வாறான நகர்வுகளுக்கு செயற்படுத்துகின்ற போது தமிழ் தேசியம் பாதுகாக்கப்படும், தமிழ் மக்கள் பாதுகாக்கபடுவார்கள் என்பதை பற்றி சிந்திப்பதோடு அதற்கான செயற்பாடுகளில் இறங்க வேண்டியதென்பது மிகப்பெரிய கடமையாக இருக்கிறது .
எனவே இனியும் காலதாமதம் செய்யாது இனிவரும் உள்ளுராட்சி சபை தேர்தலாக இருந்தாலும் சரி, மாகாண சபை தேர்தலாக இருந்தாலும் சரி அவற்றை எதிர் கொள்வதற்கு அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்று சேர்ந்து பாடுபட வேண்டியது இன்றைய காலக்கட்டதினுடைய தேவை என்பதை தமிழ் மக்களின் குரலாக நாங்கள் முன்வைக்கின்றோம்.