தேசியப்பட்டியல் மூலம் தாம் நாடாளுமன்றுக்கு நியமிக்கப்படாவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கூறியுள்ளதாவது, “நான் இந்த ஆண்டு பொதுத் தேர்தலில் 40,000 க்கும் அதிகமான விருப்பு வாக்குகளைப் பெற்றேன். எனவே என்னை தேசிய பட்டியலிலிருந்து நியமிக்க வேண்டும்.
நான் ஏற்கனவே கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் பேசியுள்ளேன், அவர் எனது கோரிக்கைக்கு செவிசாய்ப்பார் என்று நான் நம்புகிறேன்.
என்னை நாடாளுமன்றுக்கு நியமிக்காவிட்டால் எனது வாழ்க்கையை முடித்துக் கொள்வேன்” எனக் கூறியுள்ளார்.
அத்துடன், தேசியப் பட்டியல் மூலம் தங்களை நியமிக்க வேண்டும் என்று பலர் கோரிக்கை விடுத்து வருவதால், கட்சித் தலைவர் ஆதரவற்ற நிலைக்கு ஆளாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், கட்சித் தலைவர் அளித்த வாக்குறுதியின்படி தனக்கும் தேசியப் பட்டியலில் இடம் கிடைக்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
தன்னை கண்டியில் இருந்து தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும், கட்சித் தலைமை என்னை தேசிய பட்டியலிலிருந்து நியமிப்பதாக உறுதியளித்ததாகவும் தேசியப் பட்டியலில் இருந்து நியமிக்கப்படுவதற்கு தான் தகுதியானவன்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.