வடக்கு மாகாணத்தில் யுத்த காலத்தில் இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்களை அடிப்படையாக வைத்து, அரபு நாடுகளில் பெருமளவிலான நிதிகளை நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் திரட்டியுள்ளதாக சமூக செயற்பாட்டாளர் ராஷித் மொகமட் பாஸீர்கானால் பகிரங்க குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும், முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவுக்கும், ரிசாட் பதியுதீனுக்கும் ஏற்பட்ட நட்புறவே நாட்டில் இடம்பெற்ற பல்வேறு ஊழல் முறைகேடுகளுக்கு காரணம் எனவும், பாஸீர்கானால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ரிசாட் பதியுதீன் மீது நிதிமுறைகேடு தொடர்பான குற்றச்சாட்டை பாஸீர்கான் தொடுத்திருந்தார்.
இது தொடர்பில் மேலும் சில ஆவணங்களை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்க வருகைத்தந்தபோதே அவர் இந்த விடையங்களை தெரிவித்திருந்தார்.
இதன் போது இந்த நாட்டின் முன்னாள் ஜனாதிபதிகள் இந்த ஊழலுக்கு துணைபோயுள்ளதாகவும் தெரிவித்த அவர், ரிசாட் பதியுதீனுக்கு கொழுப்பில் 1000 கோடிக்கு மேல் சொத்துக்கள் உள்ளதாகவும் தெரிவித்தார்.
அதேசமயம் 2009 ஆண்டு அகதி முகாம்களில் இந்த ஊழல்கள் ஆரம்பிக்கப்பட்டதாகவும், அந்த காலகட்டத்தில் பசிலுக்கு எப்படி ஊழல் செய்யவேண்டும் என்பதை ரிசாட் பதியுதீனே கற்றுக்கொடுத்திருக்கிறார் என தான் நம்புவதாகவும் அவர் மேலும் கருத்து தெரிவித்தார்.