கொலை சம்பவங்கள் செய்யும் அதிகாரம் படைத்தவர்கள் எதையும் செய்து விட்டு இலங்கையில் நிம்மதியாக வாழலாம் என்பது இலங்கையின் அடிப்படையிலேயே இருக்கும் ஒரு விடயமாக காணப்படுகிறது.
அதை பிரதிபலிக்கும் மற்றுமொரு நிகழ்வுதான் ஊடகவியலாளர் நிமலராஜன் கொலை சம்பவமும், 2000ஆம் ஆண்டு மயில்வாகனம் நிமலராஜன் அவரது வீட்டில் வைத்து துப்பாக்கியால் சுட்டு கொலைசெய்யப்பட்டார். 24 வருடங்களாகியும் குற்றவாளிகள் தண்டிக்கப்படாது வாழ்ந்து வருகின்றனர்.
இது தொடர்பில் இந்த சம்பவத்தின் பின்னணியானது முகநூல் பதிவொன்றில் கீழ்கண்டவாறு தெரிவிக்கப்படுகிறது.
“தமிழ் ஆயுத ஒட்டுக்குழுவான ஈபிடிபியின் அடாவடிகளை அம்பலப்படுத்திய நிலையில் டக்லஸ் தேவானந்தா அவர்களின் உத்தரவின் பேரில்இலங்கை இராணுவத்தின் ஒத்துழைப்புடன் 11 பேர் கொண்ட ஈபிடிபி குழுவால் ஊடகவியலாளர் நிமலராஜன் என்ற நபர் படுகொலை செய்யப்பட்டு இருந்தார்.

கொழும்பிலிருந்து டக்ளஸ் தேவானந்தா வழங்கிய உத்தரவின் அடிப்படையில் யாழ்ப்பாணத்தில் இருந்து ஜெகன் என்பவர் மேற்படி கொலையை நெறிப்படுத்தியிருந்ததாக சொல்லப்பட்டிருந்தன.
நிமலராஜன் அவர்களின் கொலை தொடர்பாக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் பி 423/2000 என்ற வழக்கு இலக்கத்தின் கீழ் வழக்கு பதிய பெற்று சட்ட மா அதிபரின் ஆலோசனைக்காக கடந்த பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த நிலையில் 2021 ஆண்டளவில் குற்றவியல் நடவடிக்கையை தொடர்ந்து முன்னேடுக்க முடியாது என நிமலராஜன் அவர்கள் தொடர்பான கொலை வழக்கை சட்டமா அதிபர் திணைக்களம் கைவிட்டு இருந்தது.
வழக்கின் ஆரம்பத்தில் நெப்போலியன் என அழைக்கப்படும் செபஸ்டியன் ரமேஸ் என்பவரே நிமலராஜன் கொலை வழக்கில் பிரதான சந்தேகநபராக அடையாளம் காணப்பட்ட போதும் யாழ்ப்பாண நீதிமன்ற அதிகாரிகள் சிலரின் வழங்கிய ஒத்துழைப்போடு மேற்குறித்த நபர் இலங்கையை விட்டு தப்பி சென்று இருந்தார்.

அதேநேரம் ஒருமுறை நிமல்ராஜன் கொலை வழக்கின் பிரதான சூத்திரதாரியான நெப்போலியன் தற்போதும் தனது வெளிநாட்டு செயற்பாட்டாளர் என ஈபிடிபி டக்ளஸ் தேவானந்தா ஊடகங்களுக்கு சொல்லி இருந்தார்.
இந்நிலையில் தற்போது மேற்குறித்த கொலையுடன் தொடர்புடைய நபர் ஒருவரை சர்வதேச குற்றவியல் நீதிமன்ற சட்டம் 2001 இந்த பிரிவு 51 கீழான குற்றங்கள் புரிந்த குற்றசாட்டின் கீழ் பிரித்தானியா பொலிஸ் அதிகாரிகள் கைது செய்து இருந்தனர்.
பின்னர் இதுதொடர்பில் என்ன நடந்தது என்பது இன்று வரை வெளிவராத ஒரு விடயமாக காணப்படுகிறது.
தமிழ் தரப்புகள் மேற்குறித்த குற்றவாளியை தெளிவாக அடையாளம் காட்ட முன் வந்தால் குறித்த காலப்பகுதியில் தீவகம் உடபட வடக்கில் நடை பெற்ற பல நூறு கொலைகள் மற்றும் அதில் தொடர்புடைய இராணுவ அதிகாரிகள் , குறித்த சம்பவங்களோடு சிங்கள ஆட்சியாளர்களுக்கு இருந்த தொடர்பு உட்பட பல விடயங்களை அறிந்து கொள்ள கூடியதாக இருக்கும்” என அந்த முகநூல் பதிவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.