பாரிய வீதி விபத்து மற்றும் அனர்த்தம் ஏற்படும்போது வைத்திய கட்டமைப்பு மற்றும் ஏனைய கட்டமைப்புகளின் செயற்பாடுகளை ஒருங்கிணைத்து முன்கொண்டுசெல்லவேண்டிய செயற்பாடுகள் குறித்த அனர்த்த ஒத்திகையொன்று இன்று (03) மட்டக்களப்பில் நடாத்தப்பட்டது.
சுகாதார அமைச்சும், சுகாதார திணைக்களமும் இணைந்து அனர்த்தமுகாமைத்துவ பிரிவின் வழிகாட்டலின் நாடளாவிய ரீதியில் வீதி விபத்துக்கள் அதிகம் இடம் பெறுகின்ற 12 மாவட்டங்களின் பிரதான வைத்தியசாலை கட்டமைப்புடன் இணைந்து இந்த ஒத்திகை முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு திருமலை பிரதான வீதியில் வீதி விபத்து அனர்த்தம் ஏற்படும் போது வைத்தியசாலையின் வைத்திய கட்டமைப்புக்கள் மற்றும் பாதுகாப்பு கட்டமைப்புகள், அவசர பிரிவு கட்டமைப்புகள் மற்றும் ஏனைய கட்டமைப்புகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது தொடர்பாக ஒத்திகையும் பயிற்சியும் வழங்கும் வகையில் இந்த விபத்து ஒத்திகை நடாத்தப்பட்டது.
இந்த ஒத்தினையானது உண்மையான விபத்து ஒன்று நடைபெறுவதுபோன்று நடாத்தப்பட்டதுடன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அம்பியுலன்ஸ் வண்டிகள் ஒலியெழுப்பியவாறு இதில் பங்குகொண்ட நிலையில் அப்பகுதியில் உண்மையான விபத்து ஒன்று நடைபெற்ற மனநிலையினை தோற்றுவித்திருந்ததை காணமுடிந்தது.
இன்றைய தினம் சுகாதார அமைச்சின் இடர் முகாமைத்துவ பிரிவின் பட்ட பின் படிப்பின் பயிற்சி பிரிவின் வைத்திய அதிகாரி வைத்தியர் ஒவினி பலிகக்கார ஒருங்கிணைப்பில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் கலா ரஞ்சனி கணேசலிங்கம் தலைமையிலான வைத்திய அதிகாரிகள் குழுவினரின் வழிநடத்தலில், மட்டக்களப்பு போதனை வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவு , மட்டக்களப்பு மாவட்ட செயலகம் , மட்டக்களப்பு வாகன போக்குவரத்து பொலிஸ் பிரிவு , விமானப்படை அதிகாரிகள் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை, மட்டக்களப்பு மாநகர சபை, முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம், 1990 அவசர சேவை அம்புலன்ஸ் சேவை பிரிவு மற்றும் இடர் முகாமைத்துவ பிரிவின் பட்ட படிப்பின் பின் படிப்பு பயிற்சி மாணவர்களின் ஒத்துழைப்புடன் இந்த வீதி விபத்து அனர்த்தம் விழிப்புணர்வு ஒத்திகை நடாத்தப்பட்டது.
இதன்போது வீதி விபத்து இடம்பெறும்போது முன்னெடுக்கப்படவேண்டிய செயற்பாடுகள் மற்றும் வைத்தியசாலையில் அனர்த்ததின்போது வைத்திய கட்டமைப்பு செயற்படும் விதங்கள் குறித்தும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசரசிகிச்சைப்பிரிவு பகுதியில் பயிற்சி ஒத்திகை முன்னெடுக்க்பட்டன.