வடகிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளை தீர்ப்பதற்கு புதிய அரசாங்கம் முன்வரவேண்டும் என வடகிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சிவில் அமைப்புகளின் செயற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளதுடன், கதிரவெளியிலிருந்து மட்டக்களப்பு பாலமீன்மடு வரையான பிரதேசங்களில் இந்த இல்மனைட் அகழ்வினை மேற்கொள்வதற்குத் சில நிறுவனங்கள் திட்டமிட்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு தன்னாமுனை,மியானி மண்டபத்தில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் சிவில் சமூக செயற்பாட்டாளர்களுக்கான கருத்தரங்கு நடைபெற்றது.
அதனை தொடர்ந்து சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட ஊடக சந்திப்பு நடைபெற்றது.
வடகிழக்கு மாகாண ஒருங்கிணைப்புக்குழு மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர் க.லவகுசராசாவினால்,
இலங்கையின் வடகிழக்கு மற்றும் தெற்கில் வாழும் மக்களின் உரிமை சார்ந்த பிரச்சனைகள் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.
இக்கலந்துயாடலில் இலங்கையில் வாழும் அனைத்த இன மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
மேலும் அங்கு தெரிவிக்கையில்,
இதுவரையில் நான்கு மாவட்டங்களில் இக்கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நாட்டிலே மூவின மக்களின் வளங்கள் திட்டமிட்ட வகையில் அபகரிக்கப்படுகின்றன. பெண்களும் பன்முகப்படுத்தப்பட்ட பிரச்சனைகளுக்கு உள்ளாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். தேசியப் பிரச்சனைக்கு இன்று வரைக்கும் ஒரு நிரந்தரத் தீர்வில்லாத நிலையில் அற்கான குரலாக தென்னிலங்கயில் இருக்கும் சிவில் அமைப்புகளும் குரல்கொடுக்க முன்வந்திருக்கின்றார்கள்.
இந்த மூன்று விடயங்களையும் வெளிப்படுத்துகின்ற ஒரு ஊடக வலையமைப்பை இலங்கை முழுவதும் வடகிழக்கு தென்னிலங்கை மக்கள் உரையாடல் ஊடாக ஏற்பாடு செய்துள்ளோம். இந்த அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வள அபகரிப்பு, பெண்கள் பாதுகாப்பு, அரசியற் தீர்வு தொடர்பான விடயங்களில் தாங்கள் எதிர்கொள்கின்ற பிரச்சனைகள் வெளிப்படுத்தப்பட்டன.
இதனூடாகப் பாதிக்கப்பட்ட இந்த மக்களுக்கான தீர்வு இலங்கை அசாங்கத்தின் ஊடாகக் கிடைக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பின் ஊடாகவும் நாங்கள் வேண்டி நிற்கின்றோம்.
மேலும் தட்சணாமூர்த்தி நவஜோதி,மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செய்பாட்டாளர் தெரிவிக்கையில்,
மட்டக்களப்பைப் பொருத்தமட்டில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் அதிகம். அது தொடர்பில் நாங்கள் முறையிட எங்கு சென்றாலும், அங்கு பெண்களை ஒரு பாலியல் பொருளாகப் பார்க்கின்றார்களே தவிர அவர்களின் பிரச்சனை தொடர்பில் யாரும் கரிசனை கொள்வதாக இல்லை. மார்ச் 08ம் தகதி மாத்திரம் பெண்களைக் கொண்டாடுகின்றார்கள். பெண்களுக்கு அது இது தேவை என்று சொல்கின்றார்கள். ஆனால் நடைமுறையில் எதுவும் இல்லை.
இந்த மாவட்டத்தில் மாத்திரமல்ல வடக்கு கிழக்கில் செயற்பட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தில் அங்கம் வகிக்கும் ஒவ்வொரு பெண்களும் எத்தனை துயரங்களை அனுபவிக்கின்றார்கள் என்று அவர்களுக்குத்தான் தெரியும். ஏதாவது ஒரு செயற்பாடு செய்வதாக இருந்தால் முதல் நாளே தடையுத்தரவு ஒன்று கிடைத்துவிடும்.
எனவே பெண்கள் ரீதயில் அவர்களின் முறைப்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கு சரியான ஒரு தலைமைத்துவம் இங்கு தேவைப்படுகின்றது. இன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் அரசாங்க அதிபர் ஒரு பெண்ணாக இருந்தாலும் அவரும் பல சவால்களுக்கு மத்தியில் தான் செயற்பட்டுக் கொண்டிருப்பார்.
பெண்கள் சார்ந்த பிரச்சனைகள் தொடர்பில் தற்போது மகளிர் விவகார அமைச்சராக இருக்கும் அம்மணி அவர்கள் நேரடி கண்காணிப்புகளை மேற்கொண்டு இவற்றுக்கான தீர்வினை வழங்க வேண்டும்.
மட்டக்களப்பு சிவில் சமூக செயற்பாட்டாளர் கணபதிப்பிள்ளை இராசலிங்கம் தெரிவிக்கையில்,
வாகரைப் பிரதேசத்தில் இரண்டு விடயங்கள் முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டு நடைமுறைப்படுத்துவதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகின்றார்கள். ஒன்று கனிய மணல் அகழ்வு மற்றையது இறால் வளர்ப்புத் திட்டம்.
இல்மனைட் அகழ்வு தொடர்பில் கடந்த 2012ம் ஆண்டு காலப் பகுதியில் இருந்தே மக்கள் அதனை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கின்றார்கள்; இது தொடர்பில் எமது அரச திணைக்களங்கள் உட்பட அனைவருக்கும் எமது கோரிக்கைகளை வழங்கியிருந்தும் கூட எங்களுக்கு எவ்வித பதிலும் வழங்கப்படாமல் அந்தத் திட்டத்தை மேற்கொள்வதற்கான முன்னெடுப்புகள் மெற்கொள்ளப்படுகின்றன. அல்செமி எனும் தனியார் நிறுவனமொன்று இதனை முன்னெடுத்து வருகின்றது.
இதற்கு மக்கள் பாரிய எதிர்ப்பினை வெளிப்டுத்தி வருகின்றார்கள். இது பிரதேச செயலகத்திற்கும், மாவட்ட செயலகத்திற்கும் நன்கு தெரியும். தற்போது அங்கு வேலை நடைபெறவில்லை. ஆனால் வேலைக்கென எடுத்த ஊழியர்களுக்கு வேலை செய்யாமல் இன்னும் அவர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டுக் கொண்டிருப்பதே எங்களுக்கு மேலும சந்தேகத்தை அதிகரிக்கின்றது.
இங்கு கடற்தொழில் பிரதான தொழிலாக இருக்கின்றது. இந்த இல்மனைட் அகழ்வின் மூலம் இவர்களது வாழ்வாதாரம் முற்றாக இல்லாதொழிக்கப்படும். எதிர்காலத்தில் இங்கு சுற்றுச்சூழல் பிரச்சனைகள் அதிகம் ஏற்பட்டு எமது பிரதேசமே இல்லாமல் போகும் நிலை உருவாகும்.
தற்போது கதிரவெளி பகுதியில் இதனை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு பிரதேச மக்கள் தன்னார்வ நிறுவனங்கள், சுற்றுச்சூழல் தொடர்பாக அக்கறை கொண்ட பல அமைப்புகள் அதற்கு எதிராக எங்களுக்கு உதவ முன்வந்துள்ளனர். தற்போது கொழும்பு உயர்நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு தடையுத்தரவு பெறப்பட்டுள்ளது.
இவ்வாறு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தும் குறித்த நிறுவனம் எமது கிரமத்தில் தங்கள் வேலைகளைச் செய்து கொண்டிருக்கின்றார்கள். உயர்நீதி மன்ற வழக்கு விடயத்தை அவமதித்து அதனைக் கருத்திற் கொள்ளாது செயற்படும் அவர்களின் செயற்பாடுகளினால் மக்கள் மிகவும் பீதி அடைந்திருக்கின்றார்கள்.
குறிப்பாக கதிரவெளியில் இருந்து மட்டக்களப்பு பாலமீன்மடு வரையான பிரதேசங்களில் இந்த இல்மனைட் அகழ்வினை மேற்கொள்வதற்குத் திட்டமிட்டிருக்கிறார்கள். இந்த விடயங்களை நாங்கள் பல இடங்களில் கோரிக்கையாக முன்வைத்த போதும் கடந்த காலங்களில் இருந்த ஆளுநர் உட்பட இங்கிருந்த அமைச்சர்களும் அந்த நிறுவனத்திற்கு ஒத்துழைப்பு வழங்கி இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அக்கறை காட்டியிருந்தார்கள். இதன் காரணமாகத்தான் இந்த வருடம் ஒரு மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
எனவே இந்த மாற்றத்தினூடாக வந்தவர்கள் இதற்கான சரியான பதிலை மக்களுக்கு வழங்கி இதனை உடன் நிறுத்தி மக்களின் வாழ்வாதாரத்தினைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு அவர்களுக்கு இருக்கின்றது. எனவே புதிய அரசாங்கம் இந்த விடயத்தில் கூடுதல் கவனம் எடுத்து இதனை முற்றாக நிறுத்த வேண்டும்.