தன்னை பொலிஸார் கைது செய்ய முயன்றால், தனது 3 வயது குழந்தையை வெட்டிக் கொன்றுவிடுவதாக குறிப்பிட்டு, தனது சொந்த பிள்ளையின் கழுத்தில் கத்தி வைத்து, பணயக்கைதியாக பிடித்து
வைத்திருந்த கொடூர தந்தையொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தளம், மதுரங்குளி பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை இந்த சம்பவம் நடந்தது.
மதுரங்குளிய ஜின்னாவத்தை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய சந்தேகநபர் ஒருவரே இவ்வாறு கைது
செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.18ஆம் திகதி பிற்பகல் மதுரங்குளிய ஜின்னாவத்தையில் உள்ள வீடொன்றில் வசிக்கும் சந்தேகநபர் தனது மனைவியை தாக்குவதாக மதுரங்குளிய பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து இரண்டு பொலிஸார் அங்கு சென்றுள்ளனர்.இதேவேளை பொலிஸ் உத்தியோகத்தர்களின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தி, சந்தேக நபரை கைது செய்ய முடியாதபடி குழப்பம் ஏற்படுத்திய அவரது உறவினர்கள், சந்தேகநபர் தப்பிச் செல்ல வழியேற்படுத்தியுள்ளனர். பின்னர், அந்த இடத்தில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டதையடுத்து, இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் அங்கிருந்து புறப்பட்டு பொலிஸ் நிலையம் சென்றனர்.பின்னர், பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த சந்தேகநபரின் தந்தை மற்றும் உறவினர்கள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து மதுரங்குளிய பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினர் சந்தேக நபரை கைது செய்வதற்காக ஜின்னாவத்தை பகுதிக்கு வந்திருந்தார்.இதனைக் கண்ட சந்தேகநபர், தனது மூன்று வயது குழந்தையைப் பணயக் கைதியாகப் பிடித்துக் கொண்டு, பொலிஸாரால் கைது செய்யப்பட்ட தனது தந்தை மற்றும் மூன்று உறவினர்களை விடுவிக்கக் கோரியதுடன், இல்லையேல் குழந்தையை கொன்று விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.சந்தேக நபர் கையில் வைத்திருந்த கத்தியை எடுத்து, குழந்தையின் முதுகில் காயங்களை ஏற்படுத்தியதோடு, குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து கொலை செய்து விடுவதாக பொலிஸாரை மிரட்டியுள்ளார்.அதே சமயம், குழந்தையின் பாதுகாப்பிற்காக கையில் வைத்திருந்த அனைத்து ஆயுதங்களையும் பொலிஸார் கீழே போட்டுவிட்டு, நிராயுதபாணியான, குழந்தையை விடுவிக்குமாறு கொடூர தந்தையை கேட்டுக்கொண்டனர்.எவ்வாறாயினும், சந்தேகநபர் குழந்தையை விடுவிக்காததுடன், கூரிய கத்தியை சுழற்றி தம்மை நெருங்கி வருவதை தடுத்தபடியிருந்தார்.
அதன்போது சந்தேகநபரின் உறவினர் ஒருவர் சந்தேக நபரிடம் விரைந்து சென்று அவரை விழுத்தியபோது,
பொலிஸார் உடனடியாக செயற்பட்டு சந்தேக நபரை கைது செய்துள்ளனர். ஏற்கனவே வெட்டுக்காயங்களுக்கு உள்ளான மூன்று வயது குழந்தை உடனடியாக புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.