நுவரெலியா மாவட்ட மோட்டார் போக்குவரத்து அலுவலகத்தின் தலைமை பரிசோதகர் ஜாலிய பண்டார அவர்களால் நேற்று (22) பிற்பகல் நீண்ட மற்றும் குறுகிய தூரம் பயணிக்கும் பஸ்கள், தனியார் பஸ்கள் மற்றும் நுவரெலியா வீதியில் செல்லும் அனைத்து வாகனங்களையும் திடீரென பரிசோதனை செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
நுவரெலியா போக்குவரத்துப் பொலிஸ் பிரிவின் அதிகாரிகளின் உதவியுடன் வாகனங்கள் பரிசோதனை செய்யப்பட்டது.
குறித்த பரிசோதனையின் போது, பஸ்கள் பயணிகள் போக்குவரத்து சேவைகளுக்கு ஏற்ற நிலையில் உள்ளதா ? என்பது குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது,
மொத்தமாக 40 வாகனங்களை பரிசோதனை செய்ததில் 22 வாகனங்களுக்கு சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது இதில் இலங்கை போக்குவரத்து சபையின் சேவையில் ஈடுபடும் 10 பஸ்களும் , 8 தனியார் பஸ்களும் 4 லொறிகளும் அடங்குவதாக தெரிவித்தனர்.

மேலும் மோட்டார் வாகன பரிசோதகர் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்களையும் , தனியார் பஸ்களையும், பொருத்தமற்ற நிலையில் சேவையில் ஈடுபடுத்தப்பட்ட பல தனியார் வாகனங்களையும் தற்காலிகமாக சேவையிலிருந்து நிறுத்துவதற்கும் நடவடிக்கை எடுத்தனர் , மேலும் அந்த வாகனங்களில் உள்ள குறைபாடுகளை 14 நாட்களுக்குள் சரி செய்து, மோட்டார் வாகன ஆய்வாளரிடம் ஆய்வுக்கு சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவித்தல் வழங்கப்பட்டது.
பொது போக்குவரத்து வாகனங்களில் விபத்துகள் ஏற்படக்கூடிய வகையில் பொருத்தப்பட்டுள்ள அபாயகரமான மேலதிக உதிரிபாகங்களை அகற்றவும் சாரதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது,
அத்துடன் அபாயகரமான மேலதிக உதிரிபாகங்களை அகற்றப்படும் வரை வாகனங்களுக்கு வழங்கப்பட்ட வருடாந்த வருவாய் உரிமங்கள் நுவரெலியா போக்குவரத்து பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டு அபாயகரமான மேலதிக உதிரிபாகங்களை அகற்றி மீண்டும் மோட்டார் வாகன ஆய்வாளரிடம் காட்டப்பட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டது.

நுவரெலியா – கண்டி பிரதான வீதி மற்றும் நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியிலும் முதல்கட்டமாக பல இடங்களில் நின்று இவ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
பொதுமக்களின் பாதுகாப்பை கருதியும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாட்டில் இடம்பெற்ற வாகன விபத்துக்களின் அதிகரிப்பைக் கருத்திற் கொண்டும் இனி வரும் நாட்களில் வாகன குறைப்பதற்கு , விபத்துகளால் பலர் உயிரிழப்பதையும், அங்கவீனர்களாவதையும் தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது எனவும் இதில் வாகனங்களில் முன்புறம் பொருத்தப்பட்டுள்ள தேவைக்கு புறம்பான மின்விளக்குகள் காரணமாக எதிர்திசையில் இருந்து வரும் வாகனங்களை வீதியில் செலுத்த முடியாமல் போகலாம் இதனால் விபத்துகள் சம்பவிப்பதற்கும் அதிக வாய்ப்புள்ளது கடந்த காலங்களில் வாகனங்களில் பொருத்தப்படும் மேலதிக உதிரிபாகங்களினால் பல விபத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளது எனவும் தெரிவித்தார்.

எனினும் நுவரெலியா மாவட்டத்தில் இனி வரும் நாட்களில் வீதிகளில் செல்லும் வாகனங்களின் சோதனையிடும் நடவடிக்கையை பாரியளவில் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் நுவரெலியா மாவட்டத்தின் தலைமை மோட்டார் போக்குவரத்து வாகன பரிசோதகர் ஜாலிய பண்டார மேலும் தெரிவித்தார் .