முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பாதுகாப்பிற்காகக் கடமையாற்றியிருந்த 116 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நேற்று (14) தங்களது கடமைகளை நிறைவு செய்து வெளியேறினர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பாதுகாப்பில் எவ்வித குறைப்பும் மேற்கொள்ளப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பாதுகாப்பு தொடர்பில் மதிப்பீடு செய்யப்பட்டதன் பின்னரே, அவருக்கான பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையை 60ஆக மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதிகள் உள்ளிட்ட சிரேஷ்ட தரப்பினருக்கான பாதுகாப்பு தொடர்பில் ஆராயப்பட்டு அவர்களுக்காக ஒதுக்கப்படும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையைத் திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புப் பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களின் வருடாந்த செலவு 1,100 மில்லியன் ரூபாவாகும் எனவும் அதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்காக வருடாந்தம் 326 மில்லியன் ரூபாய் செலவிடப்படுவதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.