1915 கலவரமானது சிங்கள பெளத்தபேரினவாதம் எவ்வாறு தன்னைத்தகவமைத்து வலுப்படுத்தியது
என்பதைக் காட்டி நிற்கும் முக்கியமான தொடக்கப்புள்ளியாகும். இலங்கையில்சிறுபான்மையினரின் எதிர்காலம் குறித்தமுக்கியமான கேள்விகளை இந்தக் கலவரம் எழுப்பியது. அதேவேளை இனத்துவத்தை விட ஆதிக்கத்தில் இருந்தோரின் வர்க்க நலன்களே முன்னிலையில் இருந்தன என்பதை இந்நிகழ்வை ஒட்டிய அரசியல்தலைவர்களின் நடத்தை காட்டி நின்றது.
இக்கலவரத்திற்கு முன்பே முஸ்லீம்களைஆத்திரமூட்டும் மேலாதிக்கத்தைநிலைநிறுத்தும் நடவடிக்கைகளில்
சிங்கள பெளத்தர்கள் தொடர்ச்சியாகஈடுபட்டு வந்துள்ளனர். முஸ்லீம்களின் பள்ளிவாசல்களுக்கு முன்னால்
பெருத்த சத்தத்துடன் பெரகர போகும் நடவடிக்கைகளில் பெளத்தர்கள் 1860களில்
இருந்தே ஈடுபட்டு வந்தனர். 1880களில்கண்டியில் இவ்வகையான செயற்பாடுகள் அதிகரித்த நிலையில் அவை சிறுசிறு பதட்டங்களுக்கு வழிவகுத்தாலும் அவை மோதலாக மாறவில்லை. 1902 இல் காலியில் இதே போன்ற ஒரு பெரகர ஊர்வலம் பெளத்த முஸ்லீம் சமூகங்களுக்கு இடையே நெருக்கடியைத் தோற்றுவித்தது.
1907ம் ஆண்டு எசல பெரகர கம்பொல பள்ளிவாசல் வழியாகப் போகும்போது மோதல் ஏற்பட்டு 6 பேர் காயமடைந்தனர். இவ்வாறு மெதுமெதுவாக புகையத்தொடங்கிய பிரச்சனையே 1915இல் கொழுந்துவிட்டெரிந்தது. 1915ம் ஆண்டுக் கலவரம் மிகுந்ததிட்டமிடலுடன் நடத்தப்பட்டது.
நாடெங்கும் 116 இடங்களில் கலவரங்கள் நடந்தன. 25 முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர், 186 பேர் காயமடைந்தனர், குறைந்தது நான்கு பெண்கள் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டனர். 4075 கடைகள் சூறையாடப்பட்டன. 350 வீடுகளும் 17 பள்ளிவாசல்களும் முழுமையாகத்தீக்கிரையாகின. அக்காலப் பெறுமதியில்இந்தக் கலவரத்தில் ஏற்பட்ட சேதம் கிட்டத்தட்ட 7 மில்லியன் இலங்கை
ரூபாய்கள் என்று கணக்கிடப்பட்டது. இந்த வன்முறையின் தன்மைஇலங்கையின் வன்முறை வரலாற்றின்
முக்கியமான தொடக்கப்புள்ளி எனக்கொள்ளல் பொருத்தம். கொலனிய நிர்வாகத்தின் கீழேயே இவ்வாறான ஒரு வன்முறையைக் கட்டவிழ்க்க முடியுமெயின் சுதந்திர இலங்கையில் எவையெல்லாம் சாத்தியமாகும் என்பதை நிச்சயமாக எதிர்பார்த்திருக்க வியலும். ஆனால்சிறுபான்மையினத் தலைவர்களின் கவனம் அவர்களது வர்க்க நலன்களிலேயே இருந்தது.
இந்நிகழ்வு நடக்கும் போது இலங்கையின் சனத்தொகையில் 66%மானவர்கள் சிங்களவர்கள், 24% தமிழர்கள்,
6.5%மானவர்கள் முஸ்லீம்கள். இந்தக் கலவரத்தை கொலனிய ஆட்சிக்கு எதிரானதாக பிரித்தானிய
நிர்வாகம் கருதியது. கடுமையாகநடவடிக்கை எடுக்க முடிவு செய்தது. வன்முறையில் ஈடுபட்ட சிங்களவர்கள்
மீது வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு 412 பேர் தண்டிக்கப்பட்டனர். 34 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
சிங்களத் தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். அவர்களைக்காப்பாற்ற களத்தில் இறங்கியோரில்முக்கியமானவர் பொன்னம்பலம் இராமநாதன். அவர் முஸ்லீம்களுக்கு
எதிராகப் பேசினார். வன்முறைகளுக்குக்காரணமான சிங்களத் தலைவர்கள் குற்றமற்றவர்கள் என்று வாதிட்டார். இராமநாதனின் முஸ்லீம் விரோத நிலைப்பாட்டுக்கு ஒரு வரலாறு உண்டு. அவர்களை ஒரு தனித்த இனமாகஅடையாளங்காண மறுத்தவர் இராமநாதன்.
முஸ்லீம் திருமணச் சட்டம் தொடர்பான விவாதம் 1885இல் இலங்கைச் சட்டசபையில்நிகழ்ந்த போது முஸ்லீம்கள் தமிழர்களே என்றும் அவர்களுக்குத் தனியான அடையாளம் இல்லை என்று வாதிட்டவர். இது குறித்த எதிர்வினைகளுக்குப் பதிலாகஅவர் எழுதிய நீண்ட ஆய்வுக் கட்டுரை1888 ஏக இல் The Ethnology of the ‘Moors’ of Ceylon என்ற யை எழுதினார். அதில் முஸ்லீம்கள் இனத்தால் தமிழர்கள் என்றும் இஸ்லாமிய மதத்தைப் பிற்பற்றுவதால் முஸ்லீம்கள் என்றும் வாதிட்டார். அவர் முஸ்லீம்கள் தனித்துவமானவர்களாக ஏற்க மறுத்தார்.
இக்கட்டுரை இலங்கையில் வாழும் முஸ்லீம்களில் பெரும்பான்மையானோர்தமிழர்களாக இருந்து இஸ்லாமிய மதத்தைத்தழுவியவர்கள் என்ற அடிப்படையைமுன்வைக்கிறது. இந்தப் பின்புலத்திலேயே பொன்னம்பலம் இராமநாதன் சிங்களத் தலைவர்களுக்காகவாதிட்ட நிகழ்வை நோக்க வேண்டியுள்ளது. குறிப்பாக கலவரம் குறித்து அவரால்எழுதப்பட்டு பிரித்தானியாவில் 1916ம் ஆண்டு வெளியிடப்பட்ட Riots and Martial Law in Ceylon, 1915 புத்தகமானது வன்முறையின் தன்மையைக் குறைத்து மதிப்பிடுவதோடு இக்கலவரம் ஏற்படுவதற்கு முஸ்லீம்களும் காரணம் என்ற வகையில் தனது வாதங்களை முன்வைக்கிறது.
இதில் கவனிக்க வேண்டிய விடயம் யாதெனில், 1915ம் ஆண்டு முஸ்லீம்கட்கு எதிரான கலவரத்தைத் தூண்டி
விட்டவர்கள் பிற்காலத்தில் சிங்களப்பேரினவாத அரசியலில் முக்கிய பங்கு வகித்தனர். 1915 இல் வணிகத் துறையில் ஆதிக்கத்தை இலக்காக வைத்து முஸ்லிம்கள் எதிரிகளாக்கப் பட்டனர். 1914ம் ஆண்டு தொடங்கிய முதலாம் உலகப் போரும் அதைத் தொடர்ந்த பொருளாதார நெருக்கடியும் இதற்கு நல்லதொரு சாட்டாகஅமைந்தது.
யாரைக் கனவான்கள் என்றும் நல்லவர்கள் என்றும் இன நல்லிணக்கத்தின் ஆணிவேர்கள் என்றும் பொன்னம்பலம் இராமாநாதன் விழித்தாரோ அவர்கள் பின்னர் அரசியலில் சட்ட நிறைவேற்று சபையில் ஆசனங்களைத் தமதாக்குகிற தேவை வந்த போது தமிழ்த் தலைவர்களுடன் முரண்படச் சிங்களக் கனவான்கள் எனப்பட்டோர் தயங்கவில்லை. இன்னறளவும் தமிழ்த்தேசிய சிந்தனைப்
பரப்பில் சிங்களத் தலைவர்கள் வஞ்சகர்என்றும் தமிழ்த் தலைவர்களைச் சான்றோர் என்றும் விளக்கும் போக்கு உள்ளது. இங்கு நாம் நினைவில் வைக்க வேண்டியது யாதெனில் 1915ல் முஸ்லீம்களுக்கு எதிராகப் பேசிய பொன்னம்பலம் இராமநாதனின் வஞ்சகம் போன்றதே சிங்களத் தேசியவாதத் தலைவர்களது வஞ்சகமும்.
1915 வரை சிங்களத் தேசிய வாதத்துடன் முரண்பாடின்றி முஸ்லீம்கட்கு எதிராகக் கலகஞ் செய்த சிங்கள இனவாதிகளைவிடுதலை செய்யுமாறு கொலனிய ஆட்சியாளர்களின் மனதை மாற்றிய இராமநாதன், 1915க்குப் பிறகு வலுப்பெற்று வந்த சிங்களப் பேரினவாதத் தலைமை தன்னையும் ஓரங் கட்டுகிற நிலைமையை 1921ல் தெளிவாக உணர்ந்த பின்பு, தமிழ் இன அடிப்படையில் தனது அரசியற்
கருத்துக்களை வெளிப்படையாகவே முன்வைத்தார். அவர் கண்ட சிங்கள-தமிழ் முரண்பாடு இரு சமூகங்களது மேட்டுக் குடிகள் இடையிலான முரண்பாடகவே இருந்தது என்பதையும் நினைவில் கொள்ளவது அவசியம்.
போன்னம்பலம் இராமநாதனின் நடந்தை தமிழ் முஸ்லீம் உறவில் நெருக்கடியை உருவாக்கியது. குறிப்பாக1915 கலவரத்தின் பின்னரான அவரின் நடத்தை தமிழ் மக்கள் மீதான பொதுவான கவலையாக, சங்கடமாக உருவெடுத்தது. இலங்கை, இந்திய முஸ்லிம்கள் பிரதேச வேறுபாடின்றித் தழிழையே வீட்டு மொழியாகக் கொண்டிருந்தனர். அவர்களிற் கணிசமானவர்களது முன்னோர்
தென்னிந்தியாவில் இருந்து வந்தவர்கள். இவை பயன்படுத்திப், பொன்னம்பலம் இராமநாதன், அவர்கள் இஸ்லாம் மதத்தைப் பின்பற்றும் தமிழர்கள் என்று கொச்சைப் படுத்தி அவர்களது தனித்துவத்தை மறுத்தார். இதன் மூலம் அவர்கள் முஸ்லிம்களுக்கான தனியான பிரதிநிதித்துவத்தை மறுத்த நோக்கம் முக்கியமாக அவரது சுயநலமென்றேகூற வேண்டும்.
தமிழ்ப் பேசுகிறஅத்தனை பேரையும் தமிழர் எனக்கூறி அந்த எண்ணிக்கை வலிமையைத் தனக்குச் சாதகமாகப் பயன் படுத்திய இராமநாதன் தமிழ் மக்களில் ஒரு பிரதேசத்தைச் சேர்ந்த வசதி படைத்த உயர் சாதியினரது நலன்களை வலியுறுத்திய ஒரு அரசியல்வாதி என்பதை நாம் மறந்துவிடலாகாது. பெளத்தர்களது மத உரிமைகள் தொடர்பாக அவர் குரல் கொடுத்துள்ளார். அது மெச்சத் தக்கது. ஆனாலும் அதற்கும் மேலாகச் சிங்களப் பேரினவாதிகளுக்குச் சாதகமாக முஸ்லிம்கட்கு எதிராகக்கொலனிய எசமானர்களிடம் மன்றாடி இருக்கிறார் என்பது அவரது நோக்கங்கள் பற்றிய பல ஐயங்களை எழுப்புகின்றன. இந்த ஐயங்கள் தமிழ் முஸ்லீம் சமூகங்களுக்கிடை யான நீண்ட கசப்புணர்வுகளாக மாறின என்பதுதான் வருந்தத்தக்க உண்மை.
முஸ்லிம் அரசியல் அடையாளத்தின் தோற்றத்திற்கு அவர்கட்கு எதிரான சிங்களப் பேரினவாதப் பகைமை ஒரு முக்கியமான பங்களித்தது. முஸ்லிம்கட்கும் தமிழருக்குமிடையே இருந்த அடையாள வேறுபாட்டின் முக்கியத்துவத்தைக்குறைவாக மதிப்பிட்டதும் போதாமல், அதை முற்றாகவே மறுத்ததன் மூலம், பொன்னம்பலம் இராமநாதன் அந்த வேறுபாட்டை மேலும் வலுப் படுத்தினார். போததற்குப் பிற்படுத்தப்பட்ட தமிழ்ச் சமூகப் பிரிவினரைப் பற்றித் தாழ்வாகப்பேசி வந்த அதே தோரணையில்முஸ்லிம்கள் பற்றி அவர் கூறிய சொற்களும் முஸ்லிம்-தமிழ்ப் பகைமையைவளர்ப்பதற்கு இன்று வரை பயன்பட்டு வந்துள்ளன. இது குறித்து அடுத்து நோக்கலாம்.