தனியார் இறக்குமதியாளர்கள் அரிசி இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் வெள்ளிக்கிழமையுடன் (20) நிறைவடைகிறது. இதற்கமைய தனியார் அரிசி இறக்குமதியாளர்கள் 16,000 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்துள்ளதாக சுங்கத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
சந்தையில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டுக்கு இவ்வார காலத்துக்குள் தீர்வு எட்டப்படும். எதிர்வரும் 31ஆம் திகதி (செவ்வாய்க்கிழமை) இந்தியாவில் இருந்து 60 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய எதிர்பார்த்துள்ளதாக வர்த்தகம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
சந்தையில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வாக அரிசி இறக்குமதி மீது விதிக்கப்பட்டிருந்த வரையறையை அரசாங்கம் தற்காலிகமாக நீக்கி அரிசி இறக்குமதிக்கு அனுமதி வழங்கியது.
தனியார் இறக்குமதியாளர்கள் புதன்கிழமை வரையான காலப்பகுதியில் 16,000 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்துள்ளனர். இறக்குமதி செய்யப்பட்ட அரிசி தொகையில் 75 ஆயிரம் கிலோகிராம் அரிசி மனித பாவனைக்கு உகந்ததல்ல என்பது கண்டறியப்பட்டு, அவற்றை மீள் ஏற்றுமதி செய்ய சுங்கத் திணைக்களம் குறித்த இறக்குமதியாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வாக இந்தியாவில் இருந்து 70 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்து இரண்டாம் தொகை அரிசியை இறக்குமதி செய்துள்ளது.
இந்தியாவில் இருந்து 60 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசியை எதிர்வரும் 31ஆம் திகதிக்குள் இறக்குமதி செய்வதாக வர்த்தக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அரிசி இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் அரிசிக்காக அறவிடப்படும் 65 ரூபா வரி தொகையை குறைக்குமாறு அரிசி இறக்குமதியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
அரிசி இறக்குமதியின்போது ஒரு கிலோகிராம் அரிசிக்கு சுமார் 215 ரூபாவை செலவழித்துவிட்டு சந்தையில் 220 ரூபாவுக்கு விற்பனை செய்வது சாத்தியமற்றது என்று அரிசி இறக்குமதியாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.