ஆபிரிக்க தொற்றுக்குள்ளான பன்றிகள் இறைச்சியாக்கப்பட்டுள்ளனவா என்பது தொடர்பில் சுகாதாரப் பரிசோதனைகளை மேற்கொண்டதன் பின்னரே பன்றி இறைச்சி சந்தைக்கு விநியோகிக்கப்படுவதாகவும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அங்கீகாரம் வழங்கப்பட்ட இடங்களில் மாத்திரம் இறைச்சி கொள்வனவு செய்யுமாறும் அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் சுசிர பிரியசிறி தெரிவித்தார்.
அதனால், பன்றி இறைச்சியை அச்சமின்றி உணவுக்காக கொள்வனவு செய்ய முடியுமென்றும் இதுதொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள விசேட குழுவில் சுகாதார நடைமுறைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டு அவற்றை நடைமுறைப்படுத்தவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கொழும்பில் நேற்று (19) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதுதொடர்பில் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், ஆபிரிக்க பன்றிக் காய்ச்சலின் காரணமாக பன்றி இறைச்சி உற்பத்தி யில் பெரும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. பன்றி பண்ணைகளிலுள்ள நோயினால் பன்றிகள் உயிரிழந்தன. பன்றி இறைச்சி உற்பத்தியாளர் களுக்கும் பொருளாதார ரீதியான சிக்கலும் ஏற்பட்டது. இந்த தொழிற்றுறையை வழமைக்கு கொண்டுவருவதற்காக அமைச்சினால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த நோயினால் இந்த தொழிற்றுறை நேரடியா கவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துவருகிறது. இந்த தொழிலில் ஈடுபட்டவர்கள் பெருந்தொகை கடனையும் பெற்றுக்கொண்டுள்ளனர். வேலைவாய்ப் புகளை இழந்துள்ளனர். இதற்காக நேற்று முன்தினம் விசேட குழு நியமிக்கப்பட்டிருந்தது. அதனடிப் படையில், மிக விரைவில் இந்த தொழிற்றுறையை வழமைக்கு கொண்டு வருவதற்காக பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
பன்றி இறைச்சி உணவாகவும் சுற்றுலாத் துறைக்கும் அவசியமாக இருக்கிறது. நாத்தார் பண்டிகை காலத்தில் பொதுவாகவே பன்றி இறைச்சிக்கான நுகர்வும் அதிகரித்தே காணப்படும். பன்றி இறைச்சியை உட்கொள்வது தொடர்பில் அச்சப்பட வேண்டியதில்லை. இதுவரையில், விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் ஆரோக்கியமான பன்றி பண்ணைகள் மற்றும் ஆரோக்கியமற்ற பன்றி பண்ணைகள் அடையா ளங்கண்டு வருகின்றன.
ஆரோக்கியமற்ற பண்ணைகளிலுள்ள பன்றிகளை முழுமையாக பரிசோதனைக்கு உட்படுத்தி அவற்றை போக்குவரத்து செய்வதற்காக சுகாதார சான்றிதழை பெற்றுக்கொடுப்போம். அதேபோன்று, இறைச் சிக்காக விலங்குகள் கொலை செய்யப்படும் இடங்களின் தரம் தொடர்பில் சுகாதார வரையறைகள் வழங்கப்பட்டுள்ளன. அந்த வரையறைகள் பரிசீலிக்கப்பட்டு, மக்களின் நுகர்வுக்கு பொருத்தமான இறைச்சியை மாத்திரம் சந்தைக்கு விநியோகிக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
சுகாதாரம் உறுதிப்படுத்தப்பட்ட இறைச்சி மாத்திரமே விற்பனைக்காக விநியோகிக்கப்படுகிறது. அந்த இறைச்சியை நுகர முடியும். ஆனால், நோய்க்குள்ளான இறைச்சி அல்லது நோயினால் உயிரிழந்த இறைச்சியை நுகருமாறு நாங்கள் கூற மாட்டோம். பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட, உறுதிப்படுத்தப்பட்ட முறையான இடங்களில் கொள்வனவு செய்யும் இறைச்சியை உணவுக்காக எடுப்பதில் பிரச்சினை ஏற்படாது’’ என்றார்.