யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவராக நான் இருந்திருந்தால், அரச அதிகாரிகளை கேலி செய்யும் முகமாக கருத்து தெரிவித்தவரை, சபையில் மன்னிப்பு கோர வைத்திருப்பேன் என முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம்(19)இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது, அவர் இதனை கூறியுள்ளார்.
அண்மையில் நடைபெற்ற யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் செயற்பாடு குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர்,
“அரச அதிகாரிகளை கேலி செய்யும் முகமாக கருத்து தெரிவித்த குறித்த நாடாளுமன்ற உறுப்பினரை ஒருங்கிணைப்பு குழு தலைவராக நான் இருந்திருந்தால் வெளியேற்றியிருப்பேன்.
ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளின் முறை பிழையானது. நடந்து கொண்ட முறையும் பிழையானது.
அதனை கூட்டத்தை தலைமை தாங்கியவர்கள் உரிய முறையில் நெறிப்படுத்தவில்லை. அல்லது ஏதாவது உள்நோக்கத்துடன் அவர்களும் அதற்கு துணை போனார்களோ தெரியாது.
சிலவேளைகளில் அவர்களுக்கு அனுபவம் இல்லாதமையும் காரணமாக இருக்கலாம். இங்கு கல்வி தகைமை என்பதனை விட அனுபவமும் மக்கள் நலன் சார்ந்த சிந்தனை உடையவர்களுமே தேவை.
அன்றைய கூட்டத்தில் நடைபெற்ற சம்பவம் தொடர்பில் ஒரு மூத்த அதிகாரியுடன் பேசிய போது அவர் எனக்கு சில விடயங்களை கூறினார்.
எந்த இடத்திலும் தாங்கள் பயப்படவில்லை எனவும், அமைதியை கடைப்பிடித்தோம் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.” என டக்ளஸ் விளக்கமளித்தார்.
அதேசமயம் யாழ் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, அங்கு கலந்து கொண்ட அரச உத்தியோகத்தர்களின் கல்வித் தகைமைகள் தொடர்பில் கேள்வியெழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.