இலங்கையிலிருந்து சபரிமலைக்கு செல்லும் யாத்திரிகளுக்கான விமான பயணக் கட்டணத்தை சலுகை விலையில் சீராக பெறுவதற்கான ஒழுங்குகளை ஏற்படுத்த வேண்டும் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு இடையில் இன்று(21) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பின் போதே பிரதமரிடம் செல்வம் அடைக்கலநாதன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அத்துடன், இலங்கையிலிருந்து சபரிமலைக்கு செல்லும் யாத்திரிகள் எதிர்நோக்கும் சிரமங்கள் தொடர்பிலும் நாடாளுமன்ற உறுப்பினர் பிரதமரிடம் எடுத்துரைத்துள்ளார்.
இதேவேளை, தலைமன்னார் பகுதியில் முப்படையினர் மற்றும் காவல்துறையினர் கையகப்படுத்தியுள்ள காணிகள் பொதுமக்களின் பாவனைக்காக மீள ஒப்படைக்கப்பட வேண்டும் என அவர் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், மன்னார் மாவட்ட மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.