கட்சிக்குள் வழக்குத் தாக்கல் என்ற விடயம் நடந்துகொண்டு தான் இருக்கின்றது. கடந்த பொதுச்சபையில் தலைவர் தெரிவின் போதும் ஒரு வழக்குத் தாக்கல் இடம்பெற்றது. அது நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்பட்டுள்ள விடயம் ஆதலால் அது தொடர்பில் கருத்துச் சொல்ல முடியாது என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழு பேச்சாளருமான ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.
மட்டு ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு மேலும் பதில் வழங்கிய அவர்,
வழக்குத் தாக்கலைத் தொடர்ந்து அதன் பின்னர் எடுக்கப்படுகின்ற முடிவுகளிலே முரண்பாடுகள் வருகின்ற போது அதனை முன்மாதிரியாகக் கொண்டு சிலரும் தமது பக்க நியாயத்தை உறுதிப் படுத்திக் கொள்வதற்காக வழக்குத் தாக்கல் செய்யும் நடவடிக்கை காணப்படுகின்றது.
இந்த விடயங்களைப் பொருத்த மட்டில் வழக்குத் தாக்கல் செய்வது என்பதை விட கட்சி மட்டத்திலேயே பேசி தீர்வு காண்பது உகந்ததாக இருக்கும். ஒரு சாரார் வழக்கை நாடும் போது மற்றைய சாராரும் தங்கள் மீது விரல் நீட்டப்படுவதைத் தடுக்கும் முகமாக சட்டத்தை நாட வேண்டி வருகின்றது.
சிலர் விட்டுக் கொடுக்கவும் மாட்டார்கள், கொடுக்கவும் மாட்டார்கள் இதனால் தா தற்போதைய நிலைமைகள் ஏற்பட்டிருக்கின்றன.
கடந்த தேர்தலில் ஏற்பட்ட குறைபாடுகள், வேட்பாளர் தெரிவுக்குழு செய்த குறைபாடுகள் காரணமாக வடமாகாணத்தில் எமக்குப் பாரிய பின்னடைவு ஏற்பட்டிருக்கின்றது. வடமாகாணத்தில் கிடைக்க வேண்டிய ஐந்து, ஆறு ஆசனங்கள் எமக்குக் கிடைக்காமல் போய்விட்டது. இதற்கான காரணம் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கின்றேன்.
மாறி மாறி குற்றங்களை முன் வைக்காமல் சுயாதீனக் குழுவொன்றை அமைத்து வட மாகாணத்தில் ஆசனங்கள் குறைந்தமைக்கு யார் காரணம் என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். மாறாக என்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக இன்னுமொருவர் மீது குற்றச்சாட்டுகளை முன்வைப்பது அறிவுபூர்வமானதாகவும், நியாயமானதாகவும் இருக்காது.
வரலாற்றில் முதன்முறையாக ஒரு சிங்கள தேசியக் கட்சியான தேசிய மக்கள் சக்தி தமிழரசுக் கட்சியைப் பின்தள்ளி முதலிடத்தைப் பெற்றுள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சங்குச் சின்னத்திற்கு மக்கள் அதிகளவிலான வாக்குகளை வழங்கியிருந்தார்கள். ஆனால் தற்போது தமிழரசுக் கட்சி பெற்றுள்ள வாக்குடன் ஒப்பிடுகையில் கனிசமான அளவு வாக்கு இழப்பு ஏற்பட்டிருக்கின்றது.
இதில் எங்கு பிழை நடந்திருக்கின்றது, எமது தீர்மானங்களில் ஏதும் தவறுள்ளதா என்பது குறித்தி சர்சைக்குரியவர்கள் நியாயங்களைச் சொல்லாமல் சுயாதீனக் குழு மூலம் இதற்கான விடயங்களைக் கண்டு அவர்களே அந்தப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று தெரிவித்தார்.
அதேசமயம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் பதவி முன்னாள் எம்.பி ஒருவருக்கு வழங்கப்பட்டது உண்மை. பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பலர் வெளியேறியதன் பின்னர் அது முற்றுப் பெற்றிருக்க வேண்டும் என தெரிவித்த அவர், இலங்கை தமிழரசுக் கட்சியின் பேச்சாளராக இதுவரை யாரும் நியமனம் செய்யப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.