போக்குவரத்து கடமைகளில் ஈடுபடும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இரவு நேரங்களில் வாகனங்களை நிறுத்துவதற்காக சமிக்ஞை காட்டும் போது எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பாக பதில் பொலிஸ் மா அதிபரினால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து கடமைகளில் இரவு நேரங்களில் வாகனங்களை நிறுத்துவதற்காக சமிக்ஞை காட்டும் போது பல சந்தர்ப்பங்களில் பல்வேறு வகையான மின்விளக்குகளைப் பயன்படுத்துவதனால் மின்விளக்குகளின் வெளிச்சம் வாகன ஓட்டுநர்களின் முகத்தில் படுவதால், சில சந்தர்ப்பங்களில் வாகனத்தை கையாள்வதிலும் கட்டுப்படுத்துவதிலும் சிரமங்கள் ஏற்படுவதுடன், விபத்துகளும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து கடமைகளில் ஈடுபடும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஒளி பிரதிபலிக்கும் ஜாக்கட்டுகள் அணியாதிருப்பதனால் அவர்களுக்கும் விபத்துகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனால், இன்று வியாழக்கிழமை (26) முதல் போக்குவரத்துக் கடமைகளில் ஈடுபடும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைவாக செயற்படுமாறு பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, வாகனங்களை நிறுத்துவதற்காக தற்போது பொலிஸ் நிலையங்களில் வழங்கப்பட்டுள்ள சிவப்பு மின் சமிக்ஞை விளக்குகளை பயன்படுத்துமாறு பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
மேலும், இரவு கடமைகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்கள் இந் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றார்களா, என்பதைத் தொடர்ந்தும் கண்காணிக்குமாறு தலைமையக பொலிஸ் பரிசோதகர்கள், பொறுப்பதிகாரிகள் மற்றும் போக்குவரத்து பொறுப்பதிகாரிகளுக்கு பதில் பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.