ஹபரணை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹபரணை – திருகோணமலை வீதியில் நேற்று வியாழக்கிழமை (26) இரவு இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக எத்திமலை பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் ஹபரணை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 56 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தர் ஆவார்.
உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஹபரணை – திருகோணமலை வீதியில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த போது டிப்பர் வாகனமொன்றில் மோதி, வீதியில் தூக்கி வீசப்பட்டு எதிர்த்திசையில் பயணித்த லொறி மற்றும் கார் ஒன்றில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஹபரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் இந்த விபத்தின் போது, போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தரும், காரில் பயணித்த பெண்ணொருவரும், 04 வயதுடைய குழந்தையும், லொறியின் சாரதியும் படுகாயமடைந்துள்ள நிலையில் ஹபரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக தம்புள்ளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, டிப்பர் வாகனத்தின் சாரதி சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை எத்திமலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.