ரயில் சாரதிகள் சங்கம் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று (24) காலை பல ரயில் பயணங்கள் இரத்து செய்யப்படலாம் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
பல புதிய புகையிரத சேவைகளை ஆரம்பிக்கும் புகையிரத அதிகாரசபையின் முயற்சிகளுக்கு எதிராக சுகயீன விடுமுறையை அறிவிக்கும் தொழிற்சங்க நடவடிக்கையை நேற்று எஞ்சின் சாரதிகள் குழு ஆரம்பித்திருந்தது.
இதன் காரணமாக நேற்று (23) சுமார் 21 புகையிரத பயணங்கள் இரத்து செய்யப்பட்டதாக புகையிரத திணைக்களத்தின் போக்குவரத்து பிரதி பொது முகாமையாளர் என்.ஜே.இதிபொலகே தெரிவித்தார்.
இன்று காலை பாதிக்கப்படக்கூடிய புகையிரதங்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் ரயில்வே பிரதிப் பொது முகாமையாளர் என்.ஜே.இதிபொலகே,
இன்று காலை இயக்கப்படவிருந்த சுமார் 11 அலுவலக ரயில்கள் இரத்து செய்யப்படும். அதன்படி, பிரதான பாதையில் 5 ரயில்கள், கரையோரப் பாதையில் இரண்டு ரயில்கள், களனிவெளி வழித்தடத்தில் இரண்டு ரயில்கள், புத்தளம் பாதையில் ஒரு ரயில் மற்றும் வடக்கு ரயில் பாதையில் ஒரு ரயில் இரத்து செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.