அஜர்பைஜான் எயார்லைன்ஸ் விமான விபத்திற்கு ரஷ்யாதான் பொறுப்பு என்று கூறாமல், அஜர்பைஜான் ஜனாதிபதியிடம், ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடின் மன்னிப்பு கோரியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரஷ்ய வான் பாதுகாப்பு அமைப்புகள் உக்ரேனிய ட்ரோன்களை விரட்டியபோது இந்த சோகமான சம்பவம் இடம்பெற்று விட்டதாகவும் புடின் தெரிவித்துள்ளார்.
அஜர்பைஜான் ஜனாதிபதி இல்ஹாம் அலியேவுடன் புடின் தொலைபேசியில் பேசிய போது குறித்த விடயங்களை கூறியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
J2-8243 என்ற விமானம் டிசம்பர் 25 அன்று அஜர்பைஜான் தலைநகர் பாகுவிலிருந்து செச்சென் தலைநகர் க்ரோஸ்னிக்கு சென்று கொண்டிருந்தபோது, தீ விபத்துக்குள்ளாகி, திசைதிருப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து விமானம், கஜகஸ்தானின் அக்டாவ் அருகே விபத்துக்குள்ளானதில் அதில் இருந்த 67 பேரில் 38 பேர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில், அஜர்பைஜான் ஜனாதிபதி இல்ஹாம் அலியேவுடன் புடின் தொலைபேசியில் பேசியதாக சர்வதேச ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன.
அதில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், ரஷ்ய வான்வெளியில் நடந்த சோகமான சம்பவம் குறித்து மன்னிப்பு கேட்டதாகவும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு மீண்டும் தனது ஆழ்ந்த மற்றும் உண்மையான இரங்கலைத் தெரிவித்து, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விரும்புவதாக தெரிவித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் வான்பாதுகாப்பு ஏவுகணைத் தாக்குதலில்தான் அஜா்பைஜான் எயார்லைன்ஸ் விமானம் விழுந்து நொறுங்கியதாக சந்தேகிக்கப்படும் நிலையில் புடினின் இந்த கருத்து தற்போது பேசுபொருளாக மாறியுள்ளமை குறிப்பிடத்கதக்கது.