கறுவா ஏற்றுமதி மூலம் 2030 ஆம் ஆண்டளவில் வருடத்திற்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக கறுவா அபிவிருத்தித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்மூலம் நாட்டின் பிரதான ஏற்றுமதி பயிர்களில் ஒன்றான கறுவாச் செய்கையை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
கறுவா அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஜனக லிந்தர இதனை குறிப்பிட்டுள்ளார்.
தற்போது கறுவா ஏற்றுமதியினால் இலங்கைக்கு வருடத்திற்கு 250 மில்லியன் டொலர் வெளிநாட்டு செலாவணி கிடைப்பதாக அவர் கூறியுள்ளார்.
இதேவேளை இலங்கையின் பிரதான பெருந்தோட்டப் பயிராக கறுவா உற்பத்தியை முன்னேற்றுவதற்கு 2025 ஆம் ஆண்டிலிருந்து புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது எனவும் கூறியுள்ளார்.
அதன்படி இதுவரை கிடைக்கப்பெற்ற வருமானத்தை இரு மடங்குகளாக அதிகரிக்கும் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் வருடத்திற்கு 25,000 மெட்ரிக் தொன் கறுவா உற்பத்தி செய்யப்படுவதுடன் அதில் 19,000 மெட்ரிக் தொன் வரை ஏற்றுமதி செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.