இராணுவத்தினரால் கடத்தப்பட்ட பிரபல சிங்கள ஊடகவியலாளரான பிரகீத் எக்னெலிகொட படுகொலை செய்யப்பட்டு, மட்டக்களப்பு எருமை தீவில் புதைக்கப்பட்டுள்ளதாக கண்கண்ட சாட்சியான முன்னாள் கடற்படை வீரர் பரபரப்புத் தகவல்களை சிங்கள மொழி யூடியூப் ஊடகவியலாளரான சுதந்த திலகசிறியின் சுதா கிரியேசன்ஸ் சேனலில் நேற்று முன்தினம் (29) வெளியிட்டுள்ளார்
சிங்கள மொழி யூடியூப் ஊடகவியலாளரான சுதந்த திலகசிறியின் சுதா கிரியேசன்ஸ் TALK With sudaththa சேனலில் நேற்று முன்தினம் (29) மாலை நடைபெற்ற குறித்த நேர்காணல் நிகழ்ச்சியில் தற்போதைக்கு வெளிநாட்டில் வசிக்கும், இலங்கைக் கடற்படையின் முன்னாள் சிப்பாயான பிரியசாந்த என தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு கலந்து கொண்ட உரையாடல் ஒன்றின் மூலம் இந்த தகவல்ககளை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
இவர் முன்னர் திருகோணமலையில் உள்ள கடற்படையின் மெக்கானிக்கல் பிரிவில் சிப்பாயாக கடமையாற்றிய நிலையில் அவரை தண்டனை ஒன்றில் இடமாற்றம் செய்யப்பட்டு மட்டக்களப்பு நகரிலுள்ள கடற்படை முகாமில் கடமையாறி வந்ததாகவும், அப்போது பிரகீத் எக்னெலிகொடவைக் கடத்திச் சென்ற குழுவில் எதிர்பாராதவிதமாக தானும் இணைக்கப்பட்டிருந்ததாகவும், அவரைக் கடத்திச் சென்ற போது அவர் ஊடகவியலாளர் என்பதோ, பிரகீத் எக்னெலிகொட என்பதோ தனக்குத் தெரிந்திருக்கவில்லை எனவும்,
பின்னர் மட்டக்களப்பு கடற்படை முகாமிற்கு கட்டப்பட்ட நிலையில் கொண்டுவரப்பட்ட அவரை படகில் ஏற்றப்பட்டு எருமைத் தீவுக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் அவரை செயலாளர் ஒருவரின் உத்தரவின் பேரிலேயே ரில்வான் எனப்படும் சிப்பாய் அவரின் தலையில் மூன்று துப்பாக்கிச் சூடுகள் நடத்தி படுகொலை செய்யப்பட்டு, அங்கு நிலத்தில் புதைக்கப்பட்டார் எனவும் பின் குறித்த படுகொலை நடத்தப்பட்டதாக அதற்குப் பொறுப்பாக இருந்த உயரதிகாரி தன்னிடம் தெரிவித்ததாகவும் கடற்படைச் சிப்பாய் பிரியசாந்த தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
பிரகீத் எக்னெலிகொடவின் தலையில் துப்பாக்கிச் சூடு நடத்திய ரில்வான் எனப்படும் கொலையாளியும் பின்னொரு காலத்தில் மர்மமான முறையில் வாகன விபத்தொன்றில் கொல்லப்பட்டதாகவும் அவர் அந்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
இதுவரை காலமும் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்டதாக நம்பப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் சம்பவத்தில், முதன்முறையாக அவர் படுகொலை செய்யப்பட்டதாக நம்பகமான ஒரு தகவல் முதல்தடவையாக கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.