அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்பிற்கு சொந்தமான நட்சத்திர ஹோட்டலுக்கு அருகே டெஸ்லா கார் ஒன்று வெடித்து சிதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியாக இந்த மாதம் 20ஆம் திகதி டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்க உள்ள நிலையில் லாஸ் வேகாஸ் நகரில் அவரது ட்ரம்ப் சர்வதேச ஹோட்டலுக்கு வெளியே எலெக்ட்ரிக் கார் வெடித்து சிதறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உயர் தொழில்நுட்பம் கொண்ட அந்த கார் வெடித்து சிதறிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
கார் வெடித்து சிதறியதால் அதற்குள் இருந்த சாரதி உயிரிழந்துள்ளதுடன், அருகில் இருந்த 7 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெடித்த சைபர் டிராக் ரகமான பேட்டரி எலெக்ட்ரிக் கார், தொழில் அதிபரும் டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளருமான எலான் மஸ்க் நிறுவனமான டெஸ்லா நிறுவன தயாரிப்பு ஆகும்.
நேற்றைய தினம் (02) லூசியானா மாகாணத்தில் உள்ள நியூ ஹார்லியன்ஸ் நகரில் உள்ள புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, கூட்டத்திற்குள் காரை மோதவிட்டு 15 பேர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பின்னர் இந்த கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
எனவே இது தீவிரவாத தாக்குதலா அல்லது தொழில்நுட்பக் கோளாறா என்ற கோணத்தில் அமெரிக்காவின் புலனாய்வு பிரிவு (FBI) விசாரணையை தொடங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.