கென்யா கிராமம் ஒன்றில் சுமார் 500 கிலோ எடையுள்ள விண்வெளி குப்பை விழுந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கென்யாவின் மகுவேனி மாவட்டத்தில் உள்ள முக்குகு கிராமத்தில் சுமார் 2.5 மீட்டர் விட்டம் மற்றும் 500 கிலோ எடையுள்ள விண்வெளி குப்பை ஒன்று விழுந்துள்ளது.
கடந்த டிசம்பர் 30ம் திகதி கிராமத்தில் விழுந்த இந்த விண்வெளி குப்பை, ரொக்கெட்டின் பிரிப்பு வளையம் என்பது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வை உறுதிப்படுத்தும் விதமாக கென்ய விண்வெளி அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில்,ரொக்கெட்டின் நிலைகளை இணைக்க பிரிப்பு வளையங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்றும், பொதுவாக மீள் நுழைவின் போது எரிந்து அழிவது அல்லது மக்கள் வசிக்காத பகுதிகளில் விழுவது போல் வடிவமைக்கப்பட்டுள்ளன என்றும் விளக்கியுள்ளது.
மேலும் வானில் இருந்து அதீத வேகத்தில் வந்ததால் தான் குறித்த வளையம் சிவப்பு நிறத்தில் மாறியிருக்கிறது. அதன் வெப்பம் குறைந்ததும் அது வழக்கமான நிறத்திற்குத் திரும்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் இதுபோல நடப்பது இது முதல்முறை இல்லை. இதை ஆய்வாளர்கள் விண்வெளிக் குப்பை எனக் குறிப்பிடுகிறார்கள். விண்வெளிக் குப்பைகள் மணிக்கு சுமார் 36 ஆயிரம் கிமீ வேகத்தில் பூமியில் வந்து விழும்.
இது மக்கள் நடமாட்டம் இருக்கும் இடத்தில் விழுந்தால் பேரழிவு ஏற்படும். ஏற்கனவே கடந்த காலங்களில் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான ரொக்கெட்களும், சீனரொக்கெட்களின் பகுதிகளும் இதுபோல பூமியில் விழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.