சுண்ணக்கல்லுடன் கைப்பற்றப்பட்ட லொறி தொடர்பில் கனிய வள திணைக்களத்தின் அறிக்கை பெறப்பட்ட பின்னர் விரைவில் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்வோம் என யாழ்ப்பாண மாவட்ட பிரதி காவல்துறை மா அதிபர் காளிங்க ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.
சாவகச்சேரி பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரனால் சோதனையிடப்பட்டு காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட லொறி தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மாவட்ட பிரதிப் காவல்துறை மா அதிபர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,“சுண்ணக்கல் அகழ்வு என்பது காவல்துறையினருக்கு பொறுப்பான காரியம் அல்ல. அது கனிய வளங்கள் திணைக்களத்துடன் சம்பந்தப்பட்ட விடயம்.
இது தொடர்பில் கனிய வளங்கள் திணைக்களமே நடவடிக்கை எடுக்க வேண்டும். சில நாட்களுக்கு முன் சாவகச்சேரி காவல் நிலையத்தில் சுண்ணக்கற்களுடன் வாகனம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது.
அதற்குரிய ஆவணங்கள், அறிக்கைகள் அனைத்தும் கனிய வளங்கள் திணைக்களத்திடம் பெற்றுக் கொண்டு விரைவில் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்வோம் என்பதை பொது மக்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.