அதிகரித்து வரும் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கும், காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கும், எரிசக்தி விநியோகங்களைப் பாதுகாப்பதற்கும், இலங்கை, அணுசக்தியின் அறிமுகத்தை தீவிரப்படுத்துகிறது.
நாட்டின் முதல் அணு மின் நிலையத்திற்கான தயாரிப்புப் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அணு மின்சார உற்பத்தியை நிர்வகிக்கும் சட்டத்தை அரசாங்கம் உருவாக்கி வருகிறது.
இது, விரைவில் சாத்தியமான முதலீட்டாளர்களிடம் இருந்து ஆர்வத்தை கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்படி, 900 மெகாவோட் திறன் கொண்ட மூன்று அணு மின்சார நிலையங்களைக் கட்டுவதற்கான அமைச்சரவைப் பத்திரம் சட்டமா அதிபர் திணைக்களத்தின் மதிப்பாய்விற்கு அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை அணுசக்தி சபையின் தலைவர் பேராசிரியர் எஸ். ஆர். டி. ரோசா தெரிவித்துள்ளார்.
மன்னார் மற்றும் புல்மோட்டை கடற்கரையோரங்களில் பல சாத்தியமான இடங்கள் இந்த திட்டங்களுக்காக அடையாளம் காணப்பட்டுள்ளன.
இவை இரண்டும் மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட பகுதிகளாகும் என்பதன் காரணமாகவே குறித்த திட்டங்களுக்காக அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்த விடயத்தில் இலங்கைக்கு உதவ ரஷ்யா, அமெரிக்கா, டென்மார்க், சீனா மற்றும் இந்தியா ஆகியவை ஆர்வம் காட்டியுள்ளன.
சுமார் 100 மெகாவோட் திறன் கொண்ட இந்த உலைகள், மிகக் குறைந்த ஆபத்துடன் இயல்பாகவே பாதுகாப்பானவையாக அமையும் என்று பேராசிரியர் ரோசா கூறியுள்ளார்.
இந்தநிலையில், அணுக்கழிவுகளை ரஷ்யா கையாளும் என்பதால், ரஷ்யாவின் ஆதரவு பரிசீலிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நடவடிக்கைகள் உரியமுறையில் செயற்படுத்தப்பட்டால், ரஷ்யாவின் தொழில்நுட்ப உதவியுடன் 2032 ஆம் ஆண்டில் இலங்கை முதல் அணுமின் நிலையத்தைக் காணலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.