5000 ரூபா போலி நாணயத்தாளுடன் அடகு நகை மீட்கச் சென்ற சந்தேக நபரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை அம்பாறை பிரதான வீதியில் அமைந்துள்ள தனியார் வங்கியில் நேற்று திங்கட்கிழமை (6) இடம்பெற்றுள்ளது.
குறித்த வங்கியில் இருந்து சம்மாந்துறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் பிரகாரம் பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையின் போது 29 வயதுடைய சந்தேக நபரான பெண் கைது செய்யப்பட்டதுடன் போலி 5000 ரூபா நாணயத்தாளும் மீட்கப்பட்டது.
குறித்த சந்தேக நபர் ஏற்கனவே அடகு வைத்த நகையை மீட்பதற்காக போலி 5000 ரூபா நாணயத்தாளை வங்கிக்குள் எடுத்து சென்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளதுடன், குறித்த வங்கியில் நாணயத்தாள்களை பரிசோதனை செய்த போது போலி நாணயத்தாள் என்பதும் தெரியவந்துள்ளது.
இவ்வாறு கைதான சந்தேக நபர் உள்ளிட்ட சான்றுப்பொருட்களை சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்ககைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஏ.எம்.நௌபரின் தலைமையில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.