மேடைப் பேச்சில் மயங்கி விழுந்த மக்கள் இன்று பசியில் மயங்கி விழும் நிலை தோன்றியுள்ளது என ஜனநாயக மக்கள் முன்னணியின் கம்பஹா மாவட்ட அமைப்பாளர் சுப்ரமணியம் சசிக்குமார் தெரிவித்தார்.
கிளீன் ஸ்ரீலங்கா திட்டம் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தேசிய மக்கள் சக்திக்கு பெருபான்மையான தமிழ் மக்கள் வாக்களித்தார்கள். இது வரவேற்கத்தக்க ஒரு விடயமாக இருந்தாலும் பல எதிர்ப்பார்ப்புக்களுடன் வாக்களித்த அனைவரது எதிர்ப்பார்ப்பும் வீணாகிப் போயுள்ளது.
பல எண்ணத்தோடு வாக்களித்தவர்களுக்கு நாட்டை தூய்மைப்படுத்தப்போகும் ஒரு அரசாங்கமாக அறிவித்து தற்போது அதற்கான திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. ஆனால் 3 வேளை சாப்பிடுவதற்குரிய அரிசி, தேங்காய்த் தட்டுப்பாடு இருக்கிறது.
பல பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. மற்றொரு பக்கம் வறுமையான நாடாக இருந்தாலும் கூட வறுமையைக் காட்டிக் கொள்ளாமல் சில வேலைத்திட்டங்களை இந்த அரசாங்கம் முன்னெடுத்துக் கொண்டிருக்கிறது.
அதில், அஸ்வெசும என்ற பெயரில் மக்களுக்குப் பணத்தை வழங்குவது, பாடசாலை மாணவர்களுக்குப் பணம் வழங்குவது இவ்வாறு பணத்தைக் கொடுத்து அவர்களது வறுமையைக் கானல் நீர் போல் காட்டிக்கொண்டிருக்கின்ற அரசாங்கமாகத்தான் இதனைப் பார்க்க வேண்டியிருக்கிறது.
மக்கள் 3 வேளை உணவு உண்பதற்குக் கஷ்டப்படும் இந்த நிலையில் தட்டுபாடாகியுள்ள அரிசியை இறக்குமதி செய்து அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் நிலை உருவாகியுள்ளது.
இது பெரும் அநியாயம் மேடைப் பேச்சில் மயங்கி விழுந்த மக்கள் இன்று பசியில் மயங்கி விழும் நிலை தோன்றியுள்ளது. எதிர்காலத்தை நினைத்து வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள்.
இது இவ்வாறு இருக்க தேசிய மக்கள் சக்தி சார்பில் வத்தளையில் போட்டியிட்ட தமிழ் வேட்பாளர் ஒருவர் கிட்டத்தட்ட 40 ஆயிரம் வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றாலும் கூட மக்களுக்கு எந்தவிதமான செயற்பாடுகளையும் மேற்கொள்ளவில்லை.
எனவே எதிர்வரும் காலங்களில் அவர் தமிழ் மக்களுக்கான அனைத்துச் செயற்பாடுகளையும் சரிவரச் செய்யவேண்டுமென கம்பஹா மாவட்ட தமிழ் மக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.