ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து செயற்படுவதற்கான பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.
இந்நிலையில் இவ்விரு கட்சிகளும் இணைந்து செயற்பட வேண்டும் என்றே மக்களும் எதிர்பார்ப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று முன்தினம் (06) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய தேசியக் கட்சியும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். எனவே, அதற்கான கலந்துரையாடல்களை முன்னெடுக்க எதிர்பார்த்திருக்கிறோம். பொருத்தமான வகையில் அந்த பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவும் திட்டமிட்டுள்ளோம்.
ஆனால், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் அதுதொடர்பில் இதுவரையில் கலந்துரையாடவில்லை. அதற்கான கலந்துரையாடல்களை ஆரம்பிக்கவும் இல்லை என்றார்.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியிலுள்ள அநேகமான பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயலாற்றுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அறிய முடிகிறது.