இலங்கையில் இனிமேல் இன, மத அவமதிப்புகளுக்கு, வன்முறைகளுக்கு இடமேயில்லை என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
இஸ்லாம் மதத்தை அவமதித்த குற்றத்திற்காக பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு 9 மாத சிறைத்தண்டனையை கொழும்பு நீதிவான் நீதிமன்றம் விதித்துள்ளமை தொடர்பில் நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமரிடம் ஊடகவியலாளர்கள் வினவியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது, இன, மத வன்முறைகளை மீண்டும் தூண்ட முயல்வோர் தொடர்ந்து சிறைகளில் அடைக்கப்படுவார்கள் என்றும் பிரதமர் எச்சரிக்கை விடுத்தார்.
எவராக இருந்தாலும் குற்றமிழைத்தவர்கள் சட்டத்தின் பிரகாரம் தண்டிக்கப்படுவார்கள் என்று சுட்டிக்காட்டிய பிரதமர், அப்படியானவர்களுக்கு நீதிமன்றம் வழங்கும் தண்டனையை தேசிய மக்கள் சக்தி அரசு வரவேற்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.