கடந்த ஆட்சிக்காலத்தில் படுகொலையாளிகள் கூட பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலைசெய்யப்பட்டிருந்த நிலையில் தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடியவர்களை ஏன் விடுதலைசெய்யக்கூடாது என மட்டக்கப்பு மாவட்ட இலங்கை தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் கேள்வியெழுப்பினார்.
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்ககோரி வடகிழக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் கையெழுத்துப்போராட்டம் நேற்றைய தினம் கிழக்கு மாகாணத்தில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
போராளிகள் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் வடகிழக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த போராட்டமானது கிழக்கின் மட்டக்களப்பில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளையும், புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட பின்னர் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்ட பின்பும் மீண்டும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகளையும், புதிய அரசாங்கம் விடுவிக்க வேண்டும் என என்பதை வலியுறுத்தியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
மட்டக்களப்பு பிரதான பஸ்நிலையத்தில் இந்த போராட்டம் போராளிகள் நலன்புரி சங்கத்தினால் நடாத்தப்பட்டது.
போராளிகள் நலன்புரி சங்கத்தின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் இ.செல்வநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், மட்டக்கப்பு மாவட்ட இலங்கை தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், தமிழ் தேசி மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ், மாவட்ட அமைப்பாளர் குககுமார், சிவில் சமூக செயற்பாட்டாளர் எஸ்.சிவயோகநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த போராட்டத்தின்போது மழைக்கும் மத்தியிலும் பெருமளவான மக்கள் ஆர்வத்துடன் வருகைதந்து கையெழுத்துப் போராட்டத்தில் பங்குகொண்டமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், பல ஆண்டுகளாக சிறையில்வாடிக்கொண்டிருக்கின்ற எமது விடுதலைக்காக போராடிய தமிழ் கைதிகளை விடுதலைசெய்யவேண்டும் என்கின்ற அறவழிப்போராட்டத்தினை முன்னெடுத்திருக்கின்றனர்.
பயங்கரவாத தடைச்சட்டம் என்னும் பெயரில் மிக மோசமான மனிதகுலத்திற்கு எதிரான சட்டம் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. இதன்மூலம் அப்பாவிகளை கூட பயங்கரவாதிகள் என்ற பார்வைக்குட்படுத்தப்படும் மிக மோசமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது.
தற்போது ஆட்சிக்குவந்த அரசாங்கம் இந்த சட்டத்தினை நீக்குவோம் என்னும் உத்தரவாதத்தினையளித்தும் கூட இன்னும் அந்த பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவில்லை. இந்த நிலையில் இந்த கொடிய பயங்கரவாத சட்டத்தின் கீழ் எமது பத்து தமிழ் அரசியல் கைதிகள் தொடர்ந்து தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள்.
இவர்கள் விரைவாக விடுதலைசெய்யப்படவேண்டும். இவர்கள் நீண்டகாலமாக சிறைச்சாலையில் கழித்துவிட்டார்கள். இருக்கும்காலத்திலாவது தமது உறவுகளுடன் இணைந்துவாழ்வதற்கு மாற்றத்தினை உருவாக்கப்போவதாக கூறும் புதிய அரசாங்கம் அதனை செய்யவேண்டும்- என்று தெரிவித்தனர்.