கிழக்கு மாகாணத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான 2 மில்லியன் பெறுமதியிலான உலர் உணவுப் பொதி வழங்கும் நிகழ்வு நேற்று (12) வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் இடம்பெற்றது.
சர்வதேச லயன்ஸ் கழகத்தின் மாவட்டம் 306, C 2 இன் ஏற்பாட்டில் கிடைக்கப்பெற்ற உதவியின் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகள் உட்பட பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள், புதிய ஆடைகள், நவீன சமையல் அடுப்புக்கள் மற்றும் சமைத்த உணவுகளும் வழங்கி வைக்கப்பட்டது.
மாங்கேணி, கிருமிச்சை, பணிச்சங்கேணி, வாகரை, தட்டுமனை, கதிரவெளி, புனாணை என பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட பயணாளிகளுக்கு இவ்வுதவி வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் மாவட்ட ஆளுநர் லயன் ரஞ்சித் பெணான்டோ, D 10 மாவட்டத்திற்கான ஆளுநர் லயன் ஆதித்தன், D10. மாவட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட வருங்கால ஆளுநர் லயன் கே.லோகேந்திரன், L .C.F. இணைப்பாளர் லயன் லலித்குமார் ஆகியோர்கள் கலந்து கொண்டனர். அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்திற்குரிய 9 லயன்ஸ் கழகத் தலைவர்கள் அதன் உறுப்பினர்கள், ஆளுநர் சபை உறுப்பினர்கள், லியோ கழகத்தின் தலைவர்கள் அதன் உறுப்பினர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகஸ்த்தர்களும் இதில் கலந்து கொண்டனர்.