உள்ளூராட்சி நிறுவனங்களில் தற்காலிகமாக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணி புரியும் ஊழியர்களுக்கு விரைவில் நிரந்தர நியமனம் வழங்கப்படும் என பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் இராஜாங்க அமைச்சர் ஜனக்க வக்கும்பர தெரிவித்துள்ளார்.
தற்போது உள்ளூராட்சி அமைப்புகளில் 12,000 வெற்றிடங்கள் காணப்படும் நிலையில் வெற்றிடங்களுக்கு விரைவில் நிரந்தர நியமனங்களை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அதற்கான அமைச்சரவை அனுமதியும் விரைவில் பெறப்படவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி உள்ளூராட்சி நிறுவனங்களில் தற்காலிக, மாற்று மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்களை உடனடியாக நிரந்தர சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அந்த நிறுவனங்களில் இருந்து அந்தந்த பணியாளர்கள் பற்றிய தகவல்களை சேகரிக்கும் பணியை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிபவர்கள், ஃப்ரீலான்ஸர்கள் மற்றும் ஏனைய ஊழியர்களும் உள்ளடங்குவதாகவும், இது தொடர்பான தகவல் சேகரிப்பு நடவடிக்கைகள் முறையான மற்றும் வெளிப்படைத் தன்மையுடன் நடத்தப்படுவதாகவும் அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.