முந்தைய அரசாங்கத்தின் காலத்தில் பயன்படுத்திய சொகுசு வாகனங்களை ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பங்கிட்டுக் கொண்டுள்ளதாக குற்றச்சாட்டொன்று எழுந்துள்ளது.
கம்பஹாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சண ராஜகருணா இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த அரசாங்கத்தின் காலத்தில் பயன்படுத்தப்பட்ட சொகுசு வாகனங்களை இந்த அரசாங்கம் அதிகாரத்துக்கு வந்தவுடன் காலிமுகத்திடலில் காட்சிப்படுத்தியது.
அவற்றை ஏலத்தில் விற்பனை செய்யப் போவதாக பாரிய ஊடகப் பிரசாரம் ஒன்றையும் மேற்கொண்டார்கள்.
ஆனால் இப்போது ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் குறித்த வாகனங்கள் பங்கிடப்பட்டுக் கொண்டுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.
இந்த அரசாங்கம் அதிகாரத்துக்கு வர முன்பு அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் மீறி, மக்களை ஏமாற்றத் தொடங்கியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.