மட்டக்களப்பு மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தினை பார்க்கும் போது எனக்கு மிகவும் வேதனையாக உள்ளது. அரசியல் தலைவர்கள் தங்களது தனிப்பட்ட விடயங்களை நிறைவு செய்ய வேண்டும் என்பதற்காக மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தினை சில்லறைக் கடையாக மாற்ற முயற்சிக்கின்ற நிகழ்வை நான் வேதனையாக பார்க்கின்றேன். பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏனையவர்கள் நடந்து கொள்ளும் விடயமானது கவலையளிக்கும் விடயமாகவுள்ளது என முன்னாள் பிரதி அமைச்சர் அமீர் அலி தெரிவித்தார்.
ஓட்டமாவடி பிரதேச செயலக கட்டடத்தின் திறப்பு விழா கடந்த செவ்வாய் கிழமை (25.07.2023) நடைபெற்ற வேளையில் அதில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், மாவட்ட அரசாங்க அதிபரை கேள்வி கேட்கின்ற பாராளுமன்ற உறுப்பினருக்கு மாவட்ட அரசாங்க அதிபருக்கு உள்ள சட்ட வரையறை அவர்களுக்கு உள்ள அதிகாரம் என்ன மற்றும் பிரதேச செயலாளருக்கு உள்ள அதிகாரம் என்னவென்று தெரியாமல் சில்லறை தனமான பிரச்சனைகளை எடுத்து வந்து ஒப்பாரி வைத்து அரசியல் செய்கின்ற நிலவரத்தை கைவிட்டு மட்டக்களப்பில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்டுப்பாடோடு நடந்து கொள்வது என்பது மாவட்டத்திற்கு மிகவும் கௌரவமாக இருக்கும் என்று நான் நினைக்கின்றேன்.
ஏனெனில் அபிவிருத்தி குழு கூட்டத்திற்கு பலதரப்பட்டவர்கள் வருவார்கள் வேறு இனத்தினை சேர்ந்த அதிகாரிகள் வருவார்கள். என்பதனை கவனத்திற் கொண்டு எமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடந்து கொள்வது வரவேற்கத்தக்கது.