அமெரிக்காவின் கலிஃபோர்னியா காட்டுத் தீயில், அமெரிக்காவைச் சேர்ந்த நீச்சல் வீரர் ஒருவர் 10 ஒலிம்பிக் பதக்கங்களை பறிகொடுத்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் லொஸ்ஏஞ்சல்ஸ் நகரில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் காட்டுத் தீ, பல ஆயிரம் வீடுகளை தீக்கிரையாக்கியது. இந்த தீ விபத்தில் பல கோடி ரூபா மதிப்பிலான உடைமைகளை ஏராளமானோர் இழந்துள்ளனர். அந்தவகையில் அமெரிக்காவைச் சேர்ந்த முன்னாள் நீச்சல் வீரர், கேரி ஹால் ஜூனியர் 10 ஒலிம்பிக் பதக்கங்களை காட்டுத் தீயில் பறிகொடுத்துள்ளதாக கவலை தெரிவித்துள்ளார்.
தீ வேகமாக பரவியதால் சில தனிப்பட்ட பொருட்களையும் நாய் ஒன்றை மட்டுமே தன்னால் பாதுகாக்க முடிந்ததாகவும் உயிரை காப்பாற்றிக்கொள்ள ஓடியபோது, ஒலிம்பிக் பதக்கங்களை பற்றி நினைத்துப் பார்க்க முடியவில்லை என்று கூறியுள்ளார். பதக்கங்கள் இல்லாமல் தன்னால் வாழ முடியும் என்றும் அத்தனை அரிய புகைப்படங்களையும் இழந்துவிட்டதாகவும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.
1996, 2000, 2004 ஆகிய 03 ஒலிம்பிக் நீச்சல் போட்டிகளில் பங்கேற்ற அவர், 05 தங்கம், 03 வெள்ளி, 02 வெண்கலப் பதக்கங்களை வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.