ஹமாஸ் உடனான போர் நிறுத்த ஒப்பந்தம் இன்னும் முழுமை பெறவில்லை என்றும், இதுகுறித்த இறுதிக்கட்ட விவரங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர் முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிக்கா மற்றும் கத்தார் அறிவித்த சில மணி நேரங்களில் நெதன்யாகு இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்காமற்றும் கத்தார் கூட்டாக வெளியிட்ட ஒப்பந்த விபரங்களின் படி காசாவில் கடந்த 15 மாதங்களாக நீடித்து வந்த பேரழிவு தரும் போரை இடைநிறுத்தம் செய்து, பணயக்கைதிகள் அவரவர் வீடுகளுக்கு செல்வதற்கான வழியைத் தெளிவுபடுத்தி உள்ளது.
இந்த போர் காரணமாக மத்திய கிழக்கு பகுதிகளில் நிலையற்ற சூழலை ஏற்படுத்தியதோடு, உலகளாவிய எதிர்ப்புகளை தூண்டியுள்ளது.
போர் நிறுத்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டதும் ஏராளமான பலஸ்தீனியர்கள் காசா வீதிகளில் இறங்கி, ஆரவாரம் செய்து, கார் ஹாரன்களை ஒலிக்கச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதேசமயம் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையில் யுத்த நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கட்டார் பிரதமர் தலைமையிலான குழு நேற்று அறிவித்தது. எதிர்வரும் ஞாயிற்றுகிழமை முதல் இந்த யுத்த நிறுத்தம் அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் யுத்த நிறுத்தம் அறிவிக்கப்பட்டு ஒரு நாள் முழுமையாக கழியாத நிலையில் இஸ்ரேலிய படைகள் 80 பலஸ்தீனர்களை கொன்று குவித்துள்ளனர்.
அதில் 20 சிறுவர்கள் 25 பெண்கள் அடங்குவதாகவும் 230 அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.