எதிர்வரும் பெரும்போகத்தில் நெல் கொள்முதல் செய்வதற்கு வசதியாக உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு நெல் சந்தைப்படுத்தல் சபை மற்றும் சதொச நிறுவனத்திற்கு சொந்தமான களஞ்சியசாலைகளை புதுப்பிப்பதற்கு தேவையான, முப்படைகளின் தொழில்நுட்ப அறிவு மற்றும் தொழிலாளர் ஆதரவை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பாதுகாப்பு அமைச்சிற்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
இது தொடர்பான ஒருங்கிணைப்பு கூட்டமொன்று நேற்று முன்தினம் (16) கொழும்பில் உள்ள ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நீர்ப்பாசனம் மற்றும் இயற்கை வளங்கள் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்னவின் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், அக்களஞ்சியசாலைகளுக்கு தேவையான புதுப்பித்தல் பணிகளை மேற்கொள்ள முப்படைகளின் உழைப்பு, தொழில்நுட்ப அறிவு மற்றும் இயந்திரங்களைப் பயன்படுத்துவது குறித்து ஆராயப்பட்டது.
இம்மாத இறுதிக்குள், பெரும்போக நெல் கொள்முதல் நடவடிக்கைகள் ஆரம்பமாவதற்கு முன்பு களஞ்சியசாலைகளின் புதுப்பித்தல் பணிகளை முடிக்க தேவையான உதயவிகளை வழங்கவும் அவற்றிற்கு தேவையான பாதுகாப்பை வழங்கவும் பாதுகாப்பு அமைச்சு இணக்கம் தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கைகள் ‘தூய்மையான இலங்கை’ (Clean Sri Lanka) திட்டத்தின் ஒரு அங்கமாக எடுக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
நாடளாவிய ரீதியில் நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு சொந்தமான 209 களஞ்சியசாலைகளும் சதொச நிறுவனத்திற்கு 12 களஞ்சியசாலைகளும் உள்ளன.
அவற்றில் நிலவும் குறைபாடுகள் தொடர்பிலும், எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் இக்கலந்துரையாடலின் போது அதிகாரிகள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர் .
நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர், மஞ்சுள பின்னலந்த, தலைமை நிர்வாக அதிகாரி, பேராசிரியர் ஏ.எல். ராஜகுரு, பிராந்திய அதிகாரிகள், இலங்கை இராணுவ பொதுப் பணியாளர் பிரிவின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தினேஷ் உடுகம உள்ளிட்ட சிரேஷ்ட முப்படை அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகள் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.