தேசிய அடையாள அட்டை விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க தவறியதால் அதனை பெற முடியாத நிலையில் உள்ளவர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அதற்கமைய, புதிய அடையாள அட்டை பெறப்பட்டால், வயதை நிரூபிக்க பிறப்புச் சான்றிதழ் அவசியம் என ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எம்.எஸ்.பி. சூரியப்பெரும தெரிவித்துள்ளார்.
தொலைந்து போன அடையாள அட்டையை மீண்டும் பெற காத்திருப்பவர்கள், பெயர் மற்றும் தங்கள் முகவரி மாற்றப்பட்டிருந்தால் அதற்கான காரணத்தையும், ஏற்கனவே உள்ள அடையாள அட்டை தொலைந்தமைக்கான சரியான காரணத்தை குறிப்பிட்டு, பொலிஸ் அறிக்கையுடன் திணைக்களத்திற்கு வர வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை புதிய டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்குவதற்கான செயல்முறை தற்போது இறுதி கட்டத்தில் உள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து கிராம அலுவலர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் பொதுமக்களுக்கு துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்படும் எனவும் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.