ஆப்பிள் நிறுவனம் புதிய பிரச்னையில் சிக்கியுள்ளது. இதற்கு கூட்டாக இருந்த அமேசான் நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனம் தங்களின் தயாரிப்புகளை இணையம் வழியாகவோ, கடைகள் வழியாகவோ விற்பனை செய்ய சில முகவர்களுக்கு மட்டுமே அங்கீகாரம் அளித்துள்ளது. அங்கீகாரம் இல்லாத சில முகவர்களால் போட்டி விலையில் ஆப்பிள் சாதனங்களை விற்க முடியும் என்றாலும், போலி தயாரிப்புகள் அதிகம் சந்தையில் வருவதை உணர்ந்த நிறுவனம் அதற்கு முழுக்கு போட தீர்மானித்தது.
அந்தவகையில், அமேசான் ஸ்பெயின் ஆன்லைன் வர்த்தகத்தில் இருந்த ஆப்பிள் மறுவிற்பனையாளர்களை கட்டுப்படுத்த தீர்மானித்தது. இதற்கு உறுதுணையாக இருந்தததாக உலகின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமாகத் திகழும் அமேசான் மீதும் புகார் எழுந்தது. இது உறுதி செய்யப்பட்ட நிலையில் அமேசான், ஆப்பிள் ஆகிய நிறுவனங்களுக்கு 218 மில்லியன் டாலர்களை அபராதத் தொகையாக CNMC எனும் ஸ்பெயின் ஆண்டிதிரஸ்ட் அதாரிட்டி (Spain Antitrust Authority) விதித்துள்ளது.
அமேசான் ஸ்பெயின் ஆன்லைன் வர்த்தகத் தளத்தில் தான் இது நடந்துள்ளது. இது ஆப்பிள் நிறுவன தயாரிப்புகள் அங்கீகரிக்கப்படாத மறுவிற்பனையாளர்கள் வழியாக விற்கப்படுவதை மட்டுப்படுத்தும் வகையில் அமைந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதற்காக விதிக்கப்பட்ட 218 மில்லியன் டாலர்கள் அபராதத் தொகையில், ஆப்பிள் நிறுவனம் 161 மில்லியன் டாலர்களும், அமேசான் நிறுவனம் 57 மில்லியன் டாலர்களும் செலுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.1788 கோடி ஆகும்.
இரண்டு நிறுவனங்களும் “ஸ்பெயினில் உள்ள அமேசான் இணையதளத்தில் ஆப்பிள் தயாரிப்புகளின் மறுவிற்பனையாளர்களின் எண்ணிக்கையை நியாயமற்ற முறையில் கட்டுப்படுத்தியுள்ளன” என்று நாட்டின் போட்டி கண்காணிப்பு அமைப்பு கண்டறிந்துள்ளது. மேலும், ஸ்பெயினில் உள்ள அமேசான் இணையதளத்தில் போட்டியிடும் ஆப்பிள் தயாரிப்புகளை விளம்பரப்படுத்தக்கூடிய விளம்பர இடங்களை மட்டுப்படுத்தியுள்ளன என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுமட்டும் இல்லாமல், பிற பிராண்டு போட்டி தயாரிப்புகளை விளம்பரப்படுத்தும் நுட்பங்களையும் அமேசானுடன் இணைந்து ஆப்பிள் நிறுவனம் கட்டுப்படுத்தியதாக ஆய்வு அமைத்து தான் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இப்போது, ஆப்பிள், அமேசான் ஆகிய இரு நிறுவனங்களும் ஸ்பெயினில் உள்ள அமேசான் இணையதளத்தில் பிற பிராண்டுகளின் விற்பனையை பாதித்த அமேசானின் நிபந்தனைகளை ஒழுங்குபடுத்தும் ஒப்பந்தங்களில் தொடர்ச்சியான உட்பிரிவுகளைச் சேர்க்க ஒப்புக்கொண்டுள்ளன.
கண்காணிப்புக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஆப்பிள் தயாரிப்புகளின் சில்லறை விற்பனைக்காக ஸ்பெயினில் அமேசான் வலைத்தளத்தைப் பயன்படுத்தி வந்த 90 விழுக்காட்டிற்கும் அதிகமான மறுவிற்பனையாளர்கள், இந்த தளத்தில் இருந்து நீக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்தது. இதனை இரு நிறுவனங்களும் ஒப்புக்கொண்டுள்ளது தெரியவந்துள்ளது.
மேலும், பிற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் உள்ள விற்பனையாளர்களால் ஸ்பெயினில் உள்ள அமேசான் வலைத்தளத்தின் ஆப்பிள் தயாரிப்புகளின் விற்பனை குறைக்கப்பட்டுள்ளது. இதனால் உறுப்பு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் மட்டுப்படுத்தப்பட்டது மற்றும் ஸ்பெயினில் உள்ள ஆன்லைன் சந்தையில் ஆப்பிள் தயாரிப்புகளை வாங்குவதற்கு நுகர்வோர் செலுத்தும் ஒப்பீட்டு விலையும் அதிகரித்து காணப்பட்டது என்று அமைப்பு கூறியுள்ளது.