விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் உடன் நம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இருப்பது போன்ற புகைப்படத்தை இணைத்து செய்ததே நான் தான் என்று தமிழ் திரைப்பட இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் இட்டுள்ள பதிவில்,
இவர், (சீமான் பெயரைக் குறிப்பிடாமல்) அவரை சந்திக்கவே இல்லை. எதன் அடிப்படையில் சொல்கிறேன் என்றால் அந்த புகைப்படத்தை எடிட் செய்து கொடுத்தவன் என்கிற அடிப்படையில் என்று பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பில் நேர்காணல் ஒன்றில் கருத்து தெரிவித்த அவர்,
அந்த காலகட்டத்தில் நான் ஒரு தனியார் தொலைகாட்சியொன்றில் வேலை செய்துகொண்டிருந்தேன். அதே தொலைக்காட்சியில் சீமானுக்கு நெருக்கமாக இருந்த ஒருவரும் அங்கு வேலை செய்துகொண்டிருந்தார்.
ஒருநாள் அவர் விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் உடன் இயக்குநர்கள் மகேந்திரன் உள்ளிட்டோர் இருந்த புகைப்படங்களை ஒரு டிவிடியில் எடுத்துக் கொண்டு வந்தார்.
அப்போது சீமானுடைய புகைப்படத்தையும் இந்த இரண்டு புகைப்படங்களையும் ஒன்றாக இணைத்து எடிட் செய்து தர வேண்டும் என்று என்னிடம் அவர் கூறினார்.
என்னால் முடிந்த அளவுக்கு அப்புகைப்படத்தை சிறப்பாக நான் எடிட் செய்து கொடுத்தேன். அந்த புகைப்படத்தை கவனித்தீர்கள் என்றால் சீமானுக்கு நிழல் வைத்திருப்பேன். விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு நிழல் வைக்க மறந்திருப்பேன்.
பின்னாட்களில் அந்த நண்பரை நேரில் சந்தித்த போது, அந்த புகைப்படம் வீட்டில் பிரேம் போடுவதற்கு என்று கூறினீர்கள். ஆனால் அது இப்போது வேறு மாதிரி போய்க் கொண்டிருக்கிறதே என்று கேட்டேன்.
அதற்கு அவர், நம்முடைய புகைப்படத்தால் ஒரு அரசியல் தலைவரை உருவாக்கியிருக்கிறோம். நல்ல விஷயம்தானே என்று தெரிவித்துள்ளார்.
சங்ககிரி ராஜ்குமாரின் இந்த குற்றச்சாட்டிற்கு நாம் தமிழர் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.