இலங்கையின் சிரேஷ்ட ஊடகவியலாளர்களில் ஒருவரான விக்டர் ஐவன்( Victor Ivan) நேற்று முன்தினம் (19) காலமானார்.
இவரின் மறைவிற்கு இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கம் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்திருந்தனர்.
இவர் இலங்கையின் முதலாவது புலனாய்வு வார இதழான ராவய வார இதழின் வௌியீட்டாளராகவும், ஆசிரியராகவும் அவர் கடமையாற்றியிருந்தார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.
அதன் பின் ராவய பத்திரிகை வௌியீடு நிறுத்தப்பட்ட பின்னரும், அவர் இலங்கையின் அரசியல் மற்றும் ஊடகத்துறையில் தாக்கம் செலுத்தக்கூடிய முக்கிய நபராக மாறியிருந்தார்.
தொடர்ந்து 1971ஆம் ஆண்டின் ஜே.வி.பி. முதலாவது கிளர்ச்சியில் லொகு அதுல எனும் புனைப் பெயரில் பங்குகொண்ட விக்டர் ஐவன், அதன் பின்னர் 1985களில் ராவய எனும் சிங்கள புலனாய்வு வார இதழொன்றை ஆரம்பித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நேற்று சுகவீனம் மற்றும் முதுமை காரணமாக தனது 75வது வயதில் அவர் காலமானார்.
சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன் தொடர்பில் முகப்புத்தகத்தில் கீழ் காணும் பதிவை ஒருவர் வெளியிட்டிருந்தார்,
அஞ்சலிகள் தோழரே!
2001 பெப்ரவரி மாதம் சரிநிகர் தனது 222 ஆவது இதழுடன் , வெளிவருவதை நிறுத்த வேண்டிய நிலைக்கு வந்திருந்தது. ‘இனங்களுக்கிடையே நீதிக்கும் சமத்துவத்துக்குமான இயக்கம்’ (மேர்ஜ்-MIRJE) இதழைத் தொடர்ந்து நடாத்துவதற்கான தனது அனுசரணையைத் தரமுடியாத பொருளாதார நெருக்கடி நிலையிலிருப்பதாக அறிவித்ததைத் தொடர்ந்து இந்த நிலை ஏற்பட்டது.
கிட்டத்தட்ட அடுத்த ஓராண்டு காலம் வரை அதைத் தொடர்ந்து நடாத்துவதற்கு ஏதாவது செய்யலாமா என்ற எமது முயற்சிகள் எவையும் சாத்தியமாகவில்லை. இந்த நிலையில் தான் ‘ராவய’ என்ற சிங்கள வார இதழை நடாத்திக்கொண்டிருந்த அதன் பதிப்பாளரும் ஆசிரியருமான விக்டர் ஐவன் அவர்கள் நமக்கு உதவ முன்வந்தார்.
உண்மையில் நாம் தான் அதை உதவி என்று நினைத்தோமே ஒழிய அதை அவர் அப்படி நினைக்கவில்லை. தமிழில் சரிநிகர் கொண்டிருந்த இடத்தைப் பேண தன்னால் முடிந்த ஒரு வாய்ப்பை தான் வழங்கி அதனால் அது வெற்றிகரமாக இயங்கமுடிந்தால் நல்லதே என்ற நோக்கத்துடன் தான் அவரந்த முயற்சியை எடுக்கத் தான் தயார் என்று தெரிவித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து, 2002 ஜனவரி இறுதியிலிருந்து ‘நிகரி’ என்ற பெயரில் அதே சரிநிகர் ஆசிரியர் குழுவிலிருந்த சிவகுமாரும், நானும் ஆசிரிய குழுவைச் சாராத வேறிருவருமாக இணைந்து பத்திரிகையை நடாத்த ஆரம்பித்தோம். சரிநிகர் இதழின் விற்பனை வருமானம், எங்களது அச்சுப்பதிப்புக்கான வருமானத்தைத் தருவதாக இருந்த காரணத்தால் நிகரியும் விரைவில் அந்த நிலைக்கு வந்துவிடும் என்ற நம்பிக்கையுடன் பத்திரிகையை நடாத்தத் தொடங்கினோம்.
ஆசிரியர் விக்டர் ஐவன், அந்தப் பத்திரிகையை வெளியிடும் நிறுவனத்தின் இயக்குனராக இருந்தபோதும், இன்னொரு சக சிங்களப் பத்திரிகையின் ஆசிரியராக இருந்தபோதும், நிகரி பத்திரிகையில் வெளிவரும் செய்திகள்,கருத்துகள் என்று எவைதொடர்பாகவும் எந்தக் கேள்விகளுமற்று முழுமையான ஆதரவைத் தந்திருந்தார்.
வார இதழாகத் தொடங்கிய நிகரியின் விநியோகம் விற்பனை என்பவை தொடர்பான பல சிக்கல்கள் இருந்தன.ஏற்கனவே இருந்த சரிநிகர் விநியோக வலையமைப்பு, பத்திரிகை நின்று போயிருந்த காரணத்தாலும், யுத்த நெருக்கடியாலான பல இடப்பெயர்வு மாற்றங்களாலும் சிதறுண்டு போயிருந்தது.
அப்போதைய சந்திரிக்கா அரசாங்கத்தின் புண்ணியத்தில் வடக்குக்கான தரைவழிப்பாதை முற்றாக மூடப்பட்டிருந்தது. எமது முதலாவது இதழின் முன்பக்கத்தின் பிரதான செய்தியாக அமைந்ததே ‘ வடக்குக்கான பாதை திறபடுமா?’ என்ற செய்திதான்.கிழக்கிலும், தமிழ்ப் பிரதேசங்களுக்கான பத்திரிகை விநியோகத்திலும் யுத்தகால நெருக்கடி இருந்து வந்தது.தவிரவும் ராவயவிடமிருந்த விநியோக வலைப்பின்னல் முழுக்க முழுக்க சிங்களப் பிரதேசத்தை அடிப்படையாகக் கொண்டிருந்ததால்,எமது வினியோக நடவடிக்கைகளிலும் பல சவால்கள் இருந்தன.ஆயினும், பத்திரிகையை வளர்த்தெடுப்பதென்பதற்காக நாம் முடிந்தளவு முயன்றோம்.ஆனால் நான்கு மாதங்களுக்கு மேல் எம்மால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. நிகரியைத் தொடர்ந்து நடாத்துவதை நடைமுறைப்படுத்த முடியாமற் போய்விட்டது.
ஆனால் இந்த அளவுக்காவது வேறு யாரும் செய்ய நினைக்காத ஒரு விடயத்தைத் தான் செய்து பார்க்கத் தயார் என்று முடிவு செய்து முயற்சித்தவர் விக்டர் ஐவன். நம் காலத்தின் ஒரு மிகக் கவனத்துக்குரிய பத்திரிகையாளர். ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் தொடர்ச்சியாக அரசியல் நிலமைகள் பற்றிய கூர்மையான விமர்சனங்களை முன்வைத்து வந்தவர்.
தமிழ் மக்களது அரசியல் அபிலாசைகள் தொர்டர்பாகவும் அவரது கருத்துக்கள் கவனத்துக்குரியவையாகவே இருந்து வந்திருக்கின்றன. சமகால அரசியல் நிலமை தொடர்பான அவரது ஆங்கிலக் கட்டுரைகள் பலவும் தமிழ்ப் பத்திரிகைகளில் தமிழாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டு வந்திருக்கின்றன.
சிங்களத்திலும், ஆங்கிலத்திலுமாக எனது கணக்குச் சரி யென்றால் 25 நூல்கள் வரை எழுதியுள்ளார். நம்காலத்தின் ஒரு முக்கியமான அரசியற் போராளி, ஊடகவியல் உரிமைகளையோ,மக்களது அரசியல் உரிமைகளையோ விட்டுக் கொடுக்காது உறுதியாகத் தன் எழுத்துக்கள் மூலம் போராடி வந்த மூத்த பத்திரிகையாளர் அவர். அவர் பற்றி எவ்வளவோ எழுதலாம்; பின்னர் வாய்ப்புக் கிடைக்கும்போது எழுதுவேன். சென்றுவாருங்கள் ஐவன்! என் அஞ்சலிகள் உங்களுக்கு !