அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியான நேற்று (22) மருதமுனை பகுதியில் ஆடு மற்றும் மோட்டார் சைக்கிள் போன்றவற்றை களவாடி சம்மாந்துறை பகுதியில் விற்பனை செய்யவிருந்த சந்தேக நபர்கள் இருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஏ.எம்.நௌபரின் வழிகாட்டுதலில் பொலிஸ் நிலைய பெருங்குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி கே.சதீஸ்கர் தலைமையிலான பொலிஸ் குழுவினர் இக்கைது நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
மேலும் சந்தேக நபர்கள் வசம் இருந்து அவர்கள் விற்பனைக்காக கொண்டு வந்த மூன்று ஆடுகள் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஐஸ் போதைப் பொருள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் கிடைத்த முறைப்பாடு காரணமாக சம்மாந்துறை பொலிஸ் நிலைய பெருங்குற்றப்பிரிவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் சம்மாந்துறை பாடசாலைக்கு பின்பகுதியில் வைத்து சம்மாந்துறை பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய சந்தேக நபரொருவர் கைதுசெய்யப்பட்டார்.
பின்னர் கைதான சந்தேக நபரிடம் மேற்கொண்ட விசாரணையில்போது சம்மாந்துறை ஹிஜ்ரா பள்ளிவாசலுக்கு அருகில் வைத்து மற்றுமொரு சந்தேக நபரான பெரியநீலாவணை 02 – மருதமுனை பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவரை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேலும் இரு சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட மூன்று ஆடுகள், இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஐஸ் போதைப்பொருட்கள் என்பனவும் சந்தேக நபர்களையும் சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.