10 ஆவது பாராளுமன்றத்தில் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக வாகனங்கள் வழங்கப்படவில்லை என்றும், ஆனால் பார்வையற்ற எம்.பியான சுகத் வசந்த டி சில்வாவுக்கு மாத்திரம் ஜனாதிபதி செயலகம் ஊடாக வாகனமொன்று வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.
இதேவேளை அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களுக்கு வாகனங்கள் அவசியமாக உள்ளது என்றும், செலவுகளை குறைத்து வாகனங்களை பயன்படுத்துவதில் எந்த பிரச்சினைகளும் தமக்கு கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (23) வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது புதிய ஜனநாயக முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே பிரதமர் இதனை கூறினார்.