கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் அகழ்வுப் பணிக்கு நிதி ஒதுக்குவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தாரென தமிழ் மக்கள் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் க. வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் யாழ்ப்பாணத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார்.
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கவனத்துக்கு நான் கொண்டு வந்தேன். அதனைத் தொடர்ந்து அவர் குறித்த அகழ்வு பணிகளுக்கு நிதி ஒதுக்குவதாக தெரிவித்தார்.மனித புதைகுழியின் அகழ்வு பணிகளில் இலங்கை தொல்பொருள் திணைக்களம் ஈடுபட்டால் அது பக்கசார்பானதாக அமையும் என தமிழ் மக்கள் நம்புகிறார்கள். எனவே, ஐ. நா. அனுசரணையில் இதனை முன்னெடுக்க வேண்டும் எனவும் நான் வலியுறுத்தினேன்.
எனது கோரிக்கை தொடர்பில் அவர் பதிலளிக்கவில்லை எனினும் குறித்த அகழ்வு பணிகளுக்கு நிதி ஒதுக்குவதாக தெரிவித்தார். இதன் போது அகழ்வு பணி தொடர்பில் முறையான சட்ட ரீதியான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என தான் ஜனாதிபதியிடம் வலியுறுத்தினார் என்றும் கூறினார்.